cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 13 கவிதைகள்

விஜி பழனிச்சாமி கவிதைகள்


1

ஒரு முறை பார்த்த பின்
மறக்காத இன்முகம் அல்லவா நீ… !

துளிர் விடும் தூய தளிரின் இலை போல
மலரும் முகம் அல்லவா நீ…!

தெளிந்த நதியின் அடியில் சிரிக்கும்
கூழாங்கற்கள் போல் தெளிந்த மனதுடைய
அன்பு நீ அல்லவா… ?

பின் ஏன்….?

ஒரு குரூரத்தின்
சீல் படிந்த புன்னகையுடன்
என்னை விலக்கினாய்..

கனிந்த மனதிற்குள்
ஓர் மாயமென நிகழும்
வஞ்சத்தின்
முதல் கரு போல… ,
என் முன் நிகழ்த்தினாய்
உன் புன்னகையை.

நேசிப்பதை அறியாது,
கை விரிக்கும் குழந்தை போல
உன் முன் நின்றேன்.
சட்டென்று வால் வீச்சு போல,
பறக்கும் பறவையைப் போல
என்னை உதறினாய்.

ஒரு சொல்லில் கூறும்
ரசவாதத்தினால் பதறிய
கைகளை இறுக இறுகக் கட்டிக் கொண்டேன்..
பின், தலை கவிழ்ந்து நடந்தேன்.

தூரத்தில் நீ சத்தமிட்டுச் சிரிக்கும் சிரிப்பு,
ஓர் பேரலையின் சுழலில் சிக்கியதோர் தோற்றம் எனக்கு.

ஆம்!!! நான் இறந்து கொண்டு இருந்தேன்..
உனக்கு
என் முத்தங்கள் என்றென்றும்… !


2.

தனித்து இருக்கும் போது சொற்கள்
ஒரு சுழல் போல் உள்ளிழுக்கிறது
மனம் ஒரு வேட்டைக் காடென வெம்பித் ததும்புகிறது.
எண்ணங்கள் எல்லாம் குருதி மனம் கொண்டு
குறுவாளை கொண்டு பலியிடவே எண்ணுகிறது…

கைகளில் எல்லாம் ரத்தம்
பொங்கி நுரைத்துத் ததும்புகிறது
உடலின் வெப்பத்தால் உள்ளுக்குள் ஒழுகும் குருதி கொப்பளித்து
குமிழ் போல் வெடிக்கிறது.
வெடிப்பில் ஓராயிரம் யுகங்கள்
கடந்து செல்கிறது மனம்…

ஆடை கலைந்து நிற்கையில் மட்டும்
மனம் குருதியை நாடுவதில்லை
கொலைக் கருவி பூக்கும் காலம் இது என்று
ஒரு யாசகன் சொல்லிவிட்டு நடந்தான்…

இந்நிலத்தின் அடியில் கொப்பளித்துக்கொண்டு இருக்கிறது அனல்.
அதன் வெப்பம் தாளாமல் கொதித்துக் கொண்டு இருக்கிறது நதி
அதில் மிதக்கும் இலைகளில் மட்டும் அதே குளிர்மை.
மனம் அதைத் தான் நாடுகிறது.

நகங்கள் நீண்டு வளர்ந்திருக்கிறது.
நாகத்தைப் போல் ஒரு சுழி.
அதே கூர்மை. அதே பளபளப்பு.
அதே சீற்றம்.

மனம்!!!
அது முதிரவே இல்லை
முதிரா மனங்கள் எல்லாம்
காமத்தை நோக்கு கொள்கிறது.
காமம் கருவறையை நோக்குகிறது.
கருவறையில் பனிக் குடங்கள் நிறைந்திருக்கிறது
அதில் ததும்பி வழிகிறது
குருதி…

குருதி பருகி வெளியேறும் சிசு
அதன் குணத்தை, அதன் மனத்தை, கைவிடுவதே இல்லை.
பால் மனமாறா
குழந்தைக்கு இடும் முத்தம்
பெரும் வஞ்சம் என எண்ணுகிறார்
பிதா..

முத்தத்தை,
வஞ்சத்தை,
துரோகத்தை
மனித மனம்
கைவிடுவதே இல்லை
கருணை என்பது ஏடுகளில் மட்டும்
இருக்கிறது.

ஏடுகள் சொற்களில் நிரம்ப வழிகிறது.
சொற்கள் தனிமையை நாடுகிறது.
தனிமை காமத்தைப் போதிக்கிறது.
போதனை கடவுளைச் சென்றடைகிறது.

கடவுளுக்குப் பலி அவசியம்.
தினமும் பலி
தினமும் குருதி
ததும்பித் ததும்பி
அதில் திளைக்கிறது குடிகள்….!


3.

மறுபடியும்
சுழலில் இருந்து
தொடங்குகிறது வாழ்வு

சலிப்புற்று வெளியேற
நினைக்கும் போதே
மீண்டும் ஒரு காதல் துளிர்க்கிறது

பேருந்து நிறுத்தத்தில்
அலுவலகத்தில்
ஒரு காப்பி ஷாப்பில்
மாலில் இருக்கும் ஏதோ ஒரு திரையரங்கில்

யாரோ ஒருவன்
ஏதோ ஒரு கணத்தில்
புன்னகைத்து விடுகிறான்

ஓரப் பார்வையிலே
தடுமாறும் பொழுதிலோ
வெட்கச் சிரிப்பிலோ

உள்ளுக்குள்
ஏதோ
இடறி அமர்ந்துகொள்கிறது

மீண்டும் வாய்க்காதா
அத்தருணம்
என்று ஏங்கும் போது…

நம் குடியிருப்பின் அருகில்
நாம் தினசரி நடைபயிலும் நடைபாதையில்
நம் அலுவலகத்தில்,
நம் அருகில் என்று
மறுபடி மறுபடி
அத்தருணம் கிடைக்கிறது.

மீண்டும் ஒரு காதல்
மீண்டும் ஒரு சுழற்சி
மீண்டும் ஒரு பாடல்
மீண்டும் ஓர் காவியம்

முட்டைகளை அடைகாக்கும்
பறவைகளாய்,
நினைவுகளை விரும்பி சுமக்கிறோம்.


 கவிதைகள் வாசித்த குரல் : அன்பு மணிவேல்

இந்தக் கவிதையை Spotify செயலி மூலமாகவும் கேட்கலாம்,

About the author

விஜி பழனிச்சாமி

விஜி பழனிச்சாமி

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website