cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 13 கவிதைகள்

ஜெயபால் பழனியாண்டி கவிதைகள்


  • விடிகிறது இரவு

 

மெலிதான சன்னல் இடைவெளியில்

நுழைகிறது காற்று..

அறையின் வெப்பத்தை

மெது மெதுவாகத் தின்று

தன் பசியாற்றிக் கொள்கிறது..

அலமாரியில் அடுக்கப்பட்ட

புத்தகங்கள்..

அட்டைப்பெட்டிகளில் முடங்கிப்போன

காகிதங்கள்..

கலைந்துகிடக்கும் ஆடைகளென

ஒவ்வொன்றாகப் பரிசம் நுகர்ந்துவிட்டு

நிறைவாக என் மேனியில்

படர்கிறது குளிர்ந்த காற்று..

என் தலையணையின்

பக்கத்தில் ஓர் இடங்கொடுத்து

போர்வை கதவைத் தாழிடுகிறேன்..

விடிகிறது இரவு..


  • இரவின் பாடல்

 

ஒரு புத்தகத்தை விரித்துப்

புரட்டுகையில் என்னோடு

வந்து அமர்ந்து கொள்கிறது

பனியிரவு..

என் கையைப் பிடித்து அளவளாவி

செல்பேசியில் பாடலை ஒலிக்கச் செய்கிறது.

பாடலின் இசையோடு இரவு

நான் பிறக்காத காலத்திற்குக்

கூட்டிச்செல்கிறது..

கறுப்பு வெள்ளையாக மாறும்

என் பிறப்பிற்கு முன்னனா வாழ்வு

எந்தன் புனர் ஜென்மமாகப்

படிமம் கொள்கிறது..

தென்னங்கீற்றின் ஒளிபரவும்

நிலா முற்றத்தில்

நட்சத்திரக் குவியல்களை

வட்டமிட்டுச் சுழல்கிறது

ஒரு காட்சிப் படிமம்..


Art Courtesy :

Feature Image : Joey Guidone (Italian Artist )

About the author

ஜெயபால் பழனியாண்டி

ஜெயபால் பழனியாண்டி

ஜெயபால் பழனியாண்டி நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர். பாரதியார் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர்.
கவிஞர், எழுத்தாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் என்ற பன்முக ஆளுமை கொண்டவர்.
சிற்றேடு, உயிர் எழுத்து, நுட்பம் ஆகிய இதழ்களில் இவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன. மிதக்கும் வெளி, ஆதலால் சொல்கிறேன் இவருடைய கவிதைத் தொகுப்புகள். மினிமலிசம் என்னும் தன்னம்பிக்கை நூல் இவருடைய சமீபத்திய படைப்பாகும்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website