- சொல்லாப்பிழை
ஆளுயர மரப்பீரோவின்
அடிப்பகுதி திறந்து பார்க்க
அனுமதி கிடைத்தபோது
மேலுதட்டிற்கு மேல் மீசை அரும்பியிருந்தது எனக்கு
பழுத்த கடிதமொன்று
பிரித்துப் பார்க்கையில் பக்கத்தில் அம்மா
முத்தான கையெழுத்தில்
விட்டுப் பிரிந்தால் சட்டெனப் பிரியும் உயிர்
எனக் கவிதை விரிய
எனக்கோ கைகால் நடுக்கம்
‘இந்தக் கண்ராவியெல்லாம் மறச்சித்தான்
அவசரமாகக் கல்யாணம் கட்டினார் ஒங்கப்பன்’
சேலையால் வாய்மூடி ஒரு பாட்டம் அழுதாள் அம்மா !
கல்லூரியில் நானெழுதிய
‘ராமஜெயத்தை’ எங்குதான் வைப்பது?
- பூப்போட்ட இளஞ்சிவப்பு காலணி அணிந்தவள்
கைதொட்டுக் கும்பிட்டு ஆண்கள் அமர
உள்ளறையில் கட்டிக்கொண்டு அழுதபடி பெண்கள்
கற்குவியலாய் வாசலெங்கும் காலணிகள்
பள்ளிப் பிள்ளைகளாய் குறுகிய சந்தின் இருபுறமும்
நெகிழி நாற்காலிகள்
மின்கம்பத்தில் சிட்டுக்குருவிகள்
ஏதுமறியாக் குழந்தைகளாய் ஓடியாட
‘சம்பந்தி சோறு, கை நனைக்கனும் ஒரு வாயாவது’
என்றபடி வந்தவர்களிடம் யாரோ சொல்லிக் கொண்டிருக்க
சாம்பல் சொம்புடன் சாங்கிய அய்யர்
சைக்கிளில் கிணறு நோக்கிச் செல்ல
‘சாங்கியம் எழுந்து வாங்க’ என்றதும்
சூப்பிய பனம்பழமாய் அமர்ந்திருக்கும்
தந்தையின் கைகள் பற்றி
அம்மாவென அரற்றியபடி நடக்கும்
இருபிள்ளைகளுக்கும்
கண்முன்னே விரியும் முடிவிலிப் பாதை
ஆயுள் முழுக்க குற்ற உணர்வைப் பரிசாய்க் கையளித்து
உத்திரத்தில் தொங்கியவளுக்கு
எத்தனை சுயநலம் !
இந்தக் கவிதையை Spotify App -இல் கேட்கலாம்
Art Courtesy :
Feature Image : Painting by Dhananjay Mukherjee.
Podcast Image : Sachin Sagare (aartique.com)
அருமை தோழர்