- ரகசியமான பிம்பங்கள்
சொல்லத் தெரியாது…
விளக்கவியலாதது…
நேச நினைவுகளின் தடம்.
அது எழுத்திலும் அடங்காதது.
ஒரு மலர் பற்றிய
சிந்தனை எவ்வாறு
குருடனுக்கு இருக்கும்.
அதுபோல்
சுவாரஸ்யங்கள்
அடங்கிய பட்டியல் நீ.
ஒரப்பார்வை,
கொஞ்சும் விழி நகர்வு,
சிறு கையசைவு,
புன்சிரிப்பு,
குறுநகை அழுகை,
முகம் மூடிய வெட்கம்,
பார்க்கா மௌனம்,
இவைகள் எல்லாம்
அந்தநேரத்துப்
புரிந்துணர்வுகள்.
சொல்லத் தயங்கியவை.,
சொல்லில் சிரித்தவை.,
சொல்லில் அழுதவை.,
சொல்லாமல் இருந்தவை.,
சொல்லிச் சொல்லி அலுத்தவை.,
எனச் சொற்கள் நிறைந்த
மூட்டை ஒன்றுள்ளதே தவிர
ரகசியமானவை
அவசியமானவை
என்ற சொற்றொடர்கள்
எங்களிடம் இருந்ததில்லை.
அனைத்திலும் முழுமையான
வாழ்க்கை இருப்பதாகத்
தெரிந்ததில்லை.
ஒவ்வொரு குறையும்
ஒவ்வொரு அனுபவம்.
ஒவ்வொரு நிறையும்
ஒவ்வொரு நம்பிக்கை.
பூக்கள் உதிர்கிறது
சூரியன் மறைகிறது
விளக்கு ஒளிர்கிறது
இருட்டு படர்கிறது
குளிர் வீசுகிறது
நிலவு வளர்கிறது
இதில்
நம்மையும் சேர்க்கிறது
பிரபஞ்சம் செயல்படுகிறது.
பெரிய ஆசைகள்
ஒன்றுமில்லை.
மரணிக்கும் தறுவாயில்
என் மார்புமீது
உன் கையும்
அதன்மீது
என் கையும்
இருக்க மரணத்தைத்
தழுவ வேண்டும்.
- என் இரவுக்கு ஒளியிழந்த நிலவின் சாயல்.
இந்த இரவு
எதற்கும் உபயோகமிக்கதாகயில்லை.
மின்வெட்டோடு வெட்டுண்டு
கிடக்கிறது என் சிந்தனை.
எதை எதையோ யோசித்தபடி
இருட்டிடம் சிறு ஒளிக்கீற்றை யாசிக்கிறேன்.
என் மௌன சித்தாந்தமும்
இரவின் அமைதி சித்தாந்தமும்
வெறுமையின் கூண்டில் அடைபட்டுள்ளது.
கடிகார சத்தம்
தூரத்து இரயில் சத்தம்
அறையின் அமைதியைச்
சிறிது சிறிதாகக் களைத்து
இரவையும் இருட்டையும் நகர்த்துகிறது.
ஒளியிழந்த நிலவு போல
இந்த இரவு
அத்தனை வெறுமைகளையும்
என் நிசப்தத்தின் மேல் உமிழ்ந்து
அதன் சாயலைப் பூசியபடி நகர்கிறது.