cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 1 கவிதைகள்

மஞ்சுளா கவிதைகள்


  • இரவின் நாக்கு

 

ஒவ்வொரு நாளும்
ஒன்று போல் இருப்பதில்லை

ஒவ்வொரு நாளிலும்
வெவ்வேறு மொழிகளில்
பகலும் இரவும் பேசிக் கொள்கின்றன

பகலின் நண்பர்கள் யாரென
இரவுக்குத் தெரியாது
இரவின் நண்பர்கள் யாரென
பகலும் அறியாது

நண்பர்களுக்கோ
பகலென்றாலும் இரவென்றாலும்
ஒன்று போல் தோன்றுகிறது

பகலிடம் பேசிய மொழியை
அவர்கள்
இரவுக்குத் தெரிவிப்பதில்லை

இரவில் அவர்கள் குடித்துவிட்டு
உளறும் மொழியை
பகல் அறிவதில்லை

நேசம் மிகுந்த நண்பர்களை
இரவின் நாக்கு
உச்சி மோந்து பூனையைப் போல்
நக்குகிறது

பகலில் அதே நண்பர்கள்
வெவ்வேறு நாக்குகளுடன்
பிரிந்து விடுகிறார்கள்

பூனை வரும் வரை
நாக்கின் ரகசியங்கள்
பூட்டி வைக்கப் படுவதால்
நண்பர்கள் நண்பர்களாகவே
இருக்கின்றனர்.

  • காலடியில் ஒரு நிழல்

என் வீட்டின் சமயலறையில்

ஒரே ஒரு ஜன்னல்
ஜன்னல் வழியே தெரிகிறது
ஆகாயத்தின் ஒரு சிறு துண்டு
அதன் வழியே ஒரு சிறு வெளிச்சம்
அம்மாவுக்கும் ஜன்னலுக்கும் இடையே
அடிக்கடி சிறு உரையாடல் நிகழும்
ஆனால் அந்த உரையாடல் எங்கள் காதுகளுக்கு கேட்பதேயில்லை
அம்மாவின்
அற்புதமான சமையலில்தான்
வீட்டின் கூரை முதல் வாசற்படி வரை
தன் அன்றாடப் பசியையும்  தாகத்தையும்
ஆயுள் வரைக்கும் ருசிக்கிறது
காலை முதல் இரவு வரை
கேட்டுக்கொண்டேயிருக்கிறது
அவள் காலடிச் சத்தம்
காலத்தின் சுழற்சியில்
சிறு சிறு மாற்றங்கள்
வருவதும் போவதும்
ஏனோ
அவளை எட்டவேயில்லை
எல்லாம் மாறிவிட்டதாக
இங்கோ சிலர் கூவுகிறார்கள்
அவள் காலடியில் ஒரு நிழல்
மறைந்து மறைந்து
பதுங்கி கிடப்பது தெரியாமல்
தினந்தோறும் தவறாமல்
தக தகவென அதிகாலையில்
பூத்து விடுகிறது
ஜன்னல் வழியே
அவளைக் கண்டு கொள்ளும்

மஞ்சள் பூவொன்று .


About the author

மஞ்சுளா

மஞ்சுளா

மதுரையை சேர்ந்தவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக பல இலக்கிய சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார்.

இதுவரை ஐந்து கவிதை தொகுதிகள் வெளிவந்துள்ளன.

மொழியின் வழியாக வாழ்வின் போதாமைகளை மாயங்களை, ரகசியங்களை, உடைத்து வெளிவரும் சொற்களையே தன் கவிதை வெளியில் மிதக்க விடுகிறார்.

“மொழியின் கதவு ” நூலுக்காக திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது (2012), தமிழ் நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை( தேனி) வழங்கிய அசோக மித்திரன் நினைவு படைப்பூக்க விருது (2019) உள்ளிட்ட விருதுகளைத் தனது கவிதைகளுக்காக பெற்றுள்ளார். நவீன கவிதை குறித்த நூல் விமர்சனங்கள் செய்து வருகிறார்.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
வைகை சுரேஷ்

அருமை கவியே. மனமார்ந்த வாழ்த்துகள். நுட்பத்தில் நுட்பமான கவிதைகள்

You cannot copy content of this Website