வளர்ந்து வரும் மகளிடம்
“அண்ணன் முன்னாடி துணி மாத்த வேணாம் பாப்பா”
என சொல்ல
சங்கடப்பட்டு நெளிகையில்
“ஏய் கழுத உள்ள போயி மாத்து”
என தங்கையைச் சத்தமிட்ட பெரியவன்
இன்னுமொரு அம்மாவாகியிருந்தான்….
அப்பாக்கு தைரியம் வரத்தான்
அவர் மெனக்கெட வேண்டும்
மகளுக்கு வீரம் வர
அப்பாவின் சட்டையை அணிதலே
அவளுக்குப் போதுமானதாக இருக்கிறது..
மனதிற்கு விருப்பமான
முழுப்பாடலை கேட்க முடியாத
சிறு பயணம் அந்நாளை
அவஸ்தையாக்கிப் போகிறது
மீண்டும் ஒலித்துக் கேட்டுவிடலாம் என்றாலும்
தவறவிட்ட அந்நேரத்து மனநிலையை
அதே பாடலாக இருந்தாலும்
திரும்பக் கொண்டு வருவதே இல்லை ….
மனப்பானைக்குள்
வெந்து வழிகிற
சோற்றின் கொந்தளிப்பாய்
பசியாற முடியாத சூட்டோடு
பழைய நினைவுகள்..
ஆற வைக்கத் தெரியாத
இயலாமையில் கழிகிறது
வாழ்நாளெல்லாம்…..
இந்த கவிதைகளை Spotify App -லும் கேட்கலாம்.