cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 14 கவிதைகள்

சேமித்த சில மனிதர்கள்


  • காதல்

நேற்று உண்டியல் சேமிப்பாய்

உள்ளே விழுந்தாய்

சேமிப்பின் ஆர்வத்தில்

மனம் தளும்பச்  சேமிக்கின்றேன்.

 

இன்று உடைத்தால் தான்

கிடைப்பாயெனில்

திடமாய் உள்ளேயே

வைத்துக் கொள்கிறேன்.

 

தினமும் நினைவுகள் தளும்பப்

பொங்கும் கண்ணீரை

முந்தானையில்

முடிந்து வைக்கின்றேன்.

 

பெரு நீர் அலையும்

ஆழி தவிக்க

அகப்பட்டுக் கிடக்கட்டும்

ஆவியாகும் வரை.

 

இப்போதெல்லாம்

தினம் ஒரு நாளை

சேமிக்காமல்

செலவழித்து விடுகிறேன்.


  • அப்பா

நிரம்பாத உண்டியலை

உலுக்கிப் பார்த்த

சில சொற்கள்

காதுகளைத் துளைக்கும்.

அறியா வயதில்

விட்டுச் சென்றும்

அப்பா கொஞ்சிய

படவா மகளே …


  • அம்மா

இல்லாத அம்மாவை

பெயருக்கு இட்டு நிரப்ப

பிளாஸ்டிக் உண்டியலில்

இரண்டு கல் போட்டு

உலுக்கும் சத்தம்

நாராசமாகக் கேட்கும்

அத்தையையும் அம்மா என்று

அழைக்கச் சொன்னால்.


  • கணவன்

தவறி விழுந்து உடைந்த

மண் உண்டியல் காசை

நமத்துப் போன தீப்பெட்டியில்

நூற்றியொரு  ரூபாய்

குல சாமி நேர்ச்சைக்கு

எடுத்து வைத்து

ஒன்றுக்கும் உதவாமல்

ஓரமாய் கிடப்பதை

அவள் பாழும் நெற்றியில்

திருநீறு பூசும் போதெல்லாம்

தொட்டுத் தள்ளி வைப்பாள்

தீட்டு நாட்களிலும்.


  • மனைவி

நவராத்திரி நோன்பு

தீர்க்க சுமங்கலியாய்

படி கலைத்ததும்

கொலு பொம்மைகளுடன்

வைத்த உண்டியலைத்

தூக்கிப் பார்த்து

காசு குறைந்து விட்டதாக

அழும் குழந்தை போல்

தனிமையில் ஒருக்களித்துப்

படுக்கும் போதெல்லாம்

அவன் கை துழாவி

கண்கள் கசியும்

கட்டிலில் கனம்

குறைந்து விட்டதாக.


  • குழந்தை

கணவனும் மனைவியும்

பிரார்த்தனை இடையே

கோயில் உண்டியலில்

காசு விழும் சத்தம்

சலங் சலங் கொலுசு

சத்தத்தை ஒத்து இருக்கச்

சாலை விபத்தில்

பறி கொடுத்த குழந்தை

வீட்டுக்கு வராமல்

மயானம் போனதை

நினைவூட்டும்

இனி என்ன வேண்டுவது

யாருக்காக …


  • குடும்பம்

மனதில் சேமித்த

வார்த்தைகளை

உடைந்து தான்

எடுத்துக் கொள்கிறோம்.

இல்லாமையின் போது.


இந்தக் கவிதைகளை Spotify App  – இல் கேட்கலாம் : 

About the author

குடந்தை அனிதா

குடந்தை அனிதா

தமிழ்நாட்டிலுள்ள கும்பகோணத்தில் பிறந்து, தற்போது ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் வசித்து வரும் குடந்தை அனிதாவின் இயற்பெயர் அனிதா பாபு. ’கவிதையும் கற்று மற’ மற்றும் ’நினைவுக் குமிழிகள்’ ஆகிய இவரின் கவிதை தொகுப்புகளை ’புஸ்தகா’- டிஜிட்டல் மீடியா வெளியிட்டுள்ளது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website