1. அடுக்களையும் அம்மாவும்
எப்போது நினைத்துக் கொண்டாலும்
அநேகமாக
அடுக்களை சார்ந்தே
நினைவுக்கு வருகிறாள்
அம்மா.
இது அம்மா செய்து
சாப்பிட்டது..
இது அம்மா செய்தால்
அப்படி மணக்கும் என்று
நாவோடு தங்கிய
அம்மாவின் ருசியோடு தான்
அலைமோதித் திரும்பும்
ஆணின் பசி.
உன் அம்மா கையால் சாப்பிட்ட
உருண்டைக் குழம்பு..
இன்னும் என் நாவிலேயே நிற்கிறது
என்பாள் தோழி.
செண்பகப் பாட்டியின் முறுகல் தோசை மிளகாய்ச் சட்னி..
ஜெயா சித்தியின் கைமுறுக்கு..
பாக்கியம் அத்தையின் ஏழுகறி ஆனம் என்று..
கைமணத்தின் வழியே தான்
அடையாளமாவார்கள்…
எம் சமத்துக்காரிகள்.
ஆட்சிமொழி கற்றிருந்தாலும்
திருமணத்துக்குள்
சமைக்கக் கற்றுக் கொள்
என்று தான்
அறிவுறுத்தப்படுகிறாள்
அக்கா.
மெல்லிய குரலில் பாடலும்
அழகழகாய் ரங்கோலியுமாக
சாளரத்துச் சிட்டுக்குருவியோடு
கவிதை பேசுகிற
அம்மாவின் அடுக்களை தாண்டிய
திறனெல்லாம்…
உப்புக் காரம் யோசிப்பவளுக்கு
உபரிச் சிந்தனை எதற்கென்ற
நக்கலாவதையும்..
சிரித்துக் கடக்கவே பழக்கியிருக்கிறோம் அவளை.
கொத்தமல்லி கோசு மீறி
வீட்டில் செல்லுபடி ஆனதேயில்லை அவளின் சிந்தனைகள்.
அத்தனை ஏன்…
உனக்கு என்ன வேண்டும்
என்று கேட்டால்..
தனக்கென்று யோசிக்கத் தெரியாது
வீட்டுக்கென்று எதையேனும் கேட்டு வைப்பாள்.
வீட்டுக் காரியங்களில்
அப்பாவின் அலட்சியங்கள்
எப்போதும் அலுவல் நிமித்தமாவதும்
அம்மாவின் அலுவல்கள்
எப்போதும் அலட்சியமாவதுமே
வீடென்பதன் விதி.
அடுக்களை எப்போதும்
அம்மாவின் ராஜ்ஜியம் தான்
என்னும் மெச்சுதலெல்லாம்..
அவளுக்கு வரமா சாபமா..
யார் கேட்டது அவளை.
கேட்டுவைக்கப் போய்
அதுவே
அவளைத் தட்டியெழுப்பி விட்டால்….
2. கெக்கலிக்கும் விக்கல்
நல்ல மழை தான்
இந்த இரவு.
ஆர்ப்பாட்டமில்லாது
நின்று
நிதானமாகப் பெய்கிறது.
மழையும் தேநீரும் கவிதையும்
எப்போதும்
உன் நினைவைக் கோருவது
போலவே
இப்போதும்.
அத்தனை சுகமில்லை
நிஜம் போலான இந்த நிழல்.
என்றைக்கோ
மழையோடு நாமிருந்த கணத்தைத்
தானாய்
இழுத்தணைத்துக் கொள்கிற
இந்தக் கணத்தின்
பசலை…
அக்கம்பக்கம் பார்த்து
வெட்கம் போர்த்திக் கொள்கிறது.
விடிந்தும் விடியாததுமாக
எனதிந்தக் கள்ளத்தனத்தினை
உளவு சொல்லவென
ஓடி வந்திருக்குமே
உனக்கொரு
விக்கல்.
அதனிடம்
நக்கலாய்ச் சிரித்திருப்பாய்
நீ..
அப்படித்தானே.
அதை என்னிடம் சொல்லி
கெக்கலிப்பதற்கென்றே
திரும்பி வரும் பார்
அந்த விக்கல்…
அதற்குத் தான்
விரும்பிக்
காத்திருக்கிறேன் நான்.
3. புல் குடித்த மிச்சப் பனி
இன்னுமா உனக்கு
விடியவில்லை என்று
என்னைத் தட்டியெழுப்பப் பார்க்கிறது
என் உத்தரவின்றி
உள்ளே வந்த
வெய்யில்.
முகத்தை அறையும் வெளிச்சப் பரலுக்காய்..
இன்னும் கொஞ்சம் சுருண்டு கொள்கிறேன்.
மசமசவென்று எங்கிருந்தோ
கசியும் பாடல் ஒன்று
என் கவனம் இழுக்கப் பார்க்கையிலும்..
எழுந்து கொள்ளும்
மனமில்லை.
ஏனோ..
சுணங்கின மனம்
சுருண்டு கிடத்தல் சுகமென்கிறது.
விடியலின் சொடுக்குதலில் அசையத் தொடங்கியிருக்கிறது புறவெளி எல்லாமும்.
எல்லாம் விழித்திருக்கின்றன.
எல்லாமுமே விழித்திருக்கின்றன…
நான் இன்னும் விழித்தேனா
இல்லையா என்பது
தெரியாமலேயே..
முழித்துக் கொண்டிருக்கிறது
என் கிறக்கம்.
என் வாசலில் பூத்திருக்கும்
புற்கள் பருகிய மிச்சமாய்
அதன் நுனி ஒழுகி கிடக்குமந்த பனித்துளியின் எச்சம்
என்மீது
கொஞ்சமே கொஞ்சம்
பட்டுத் தெறித்தால்…
ஒருவேளை
நான் விழித்துக் கொள்வேனோ என்னவோ.
4. மரணம் என்னும் ஒற்றை நாணயம்
உதித்தலின் போதே
நம் கணக்கில்
விதிக்கப்பட்டதொன்று…
மரணம் என்னும்
ஒற்றை நாணயம்.
அது எந்த நொடியிலும்
நமது நெற்றிப் பொட்டிற்குத்
தாவலாம் எனும்
சத்தியத்தை
மறந்தேயலைகிறது…
அநித்தியத்திற்குப் பிறந்த
இந்த வாழ்வு.
காலடியில் நெறிப்படுகிற
சருகின் சரசரத்தத் துடிப்பில்
ஓர் உயிரின் சங்கையறுத்த
பதைபதைப்பு
என்றேனும் பற்றிக்கொண்டிருக்கிறதா
உங்களை…
ஆம் எனில்..
அதுபோதும்.
வளியின் கையில்
நூலைத் தந்தே
உயரப் பறந்து
வாலாட்டித் திரியுமிந்த
உயிர்ப்பட்டத்தின்
நித்தியமற்ற
வாழ்வையுணர.
5. இதுவும் கடந்து போகும்
வார்த்தைகளை
வலையாக்கி
உணர்வுகளை வதைக்கின்ற குதர்க்கத்தின் முன்னே….
பழியில் வெந்து மடிகிறது
பிழையாகிப் போன
பிரியத்தின் மனது.
புளித்துப்போன கசப்புகளின் எச்சங்கள் யாவும்
அனுபவப் பாடத்தின்
பக்கங்களை நிறைத்தது
ஒன்றுதான் மிச்சம்
என்றாகையில்..
பெரிதாக என்ன சொல்லி
ஆற்றுப்படுத்திவிட முடியும் ..
வழிவழியாய்
வலிக்களத்தில் பலியாகும்
இந்த இதயத்தை…
நம்புங்கள்..
இ(எ)துவும் கடந்து போகும்.
அவ்வளவு தான்
அவ்வளவே தான் எல்லாமும்.
இந்த கவிதைகளை Spotify App -லும் கேட்கலாம்.