1- மழையைப்போல் ஆறுதல் ஏதுமில்லை
மழையில் நனைந்தபடி அழுகிறான் சார்லி சாப்ளின்
கண்ணீர்த் துளிகள் மழையில் கரைகின்றன
யாரும் அறியவொண்ணாமல்
சட்டத்துக்கு அஞ்சி
சமூகத்துக்கு அஞ்சி
தொன்மையின் வன்மைமிகு பண்பாட்டுக்கு அஞ்சி
ரகசியமாகக் கலைக்கப்பட்டு
குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட
மலரினும் மெல்லிய கருவின் மேல்
கசியும் குருதியையும் நிணத்தையும்
மெல்லத் துடைக்கிறது மழை
காகமும் நாய்களும் குதறும் முன்
எவனென்று அறியாமல்
எதற்கென்றும் புரியாமல்
தினமும் எத்தனை பேரென்றும் விளங்காமல்
அடைத்து வைக்கப்பட்டு
வியர்க்க விறுவிறுக்க
வெறித்தனமாகக் கவியும்
நாய்களின் நரிகளின் வியர்வையும் விந்தும்
உடலெங்கும் உறைந்து துர்கந்தம் வீச
கையில்
தினந்தோறும் படையலாகக் கொடுக்கப்பட்ட
சாக்லெட்டை பயபக்தியோடு உண்ணும்
சிறுமியின் மேல்
சன்னலை மீறிச்
சல்லடை வழி சிந்தும்
சிறு சாரலாக அடிக்கிறது
பூப்புனித மாமழை
கேட்பார் இன்றி
மேய்ப்பாரும் இன்றி
காலநேரமின்றி
சாலையில் திரிந்து
ரயிலடித் தூசும் வியர்வையும்
கலந்து கடினமான அழுக்கோடு
தினமும் தலையில் பூச்சூடி
தாறுமாறாகக் கொண்டையிட்டு
தன்போக்கில் போகும்
கருத்த பெண்ணின் மேல்
கருணையும் காருண்யமும் பொங்க
சடசடத்துப் பெய்கிறது
நல்ல மழை
நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே !
தென்னையைப் பனையை
தாக்கித் தகர்த்த
பீரங்கிக் குண்டுகளின் கந்தமும் கந்தகமும்
கரைந்து தரையிறங்க
பதுங்கு குழிக்குள்
பயத்தோடு இறந்து கிடப்பரின்
உணவும் மலமும் கலந்து மணக்க
கொத்துக் குண்டுகள் குத்திக் குதறிய
பாஸ்பரஸ் கலந்த ரத்தக் கறைகள்
கரையக் கரைய
புத்தனின் கருணைபோல் பொங்கப் பொங்க
ஓயாமல் பொழிகிறது
தெய்வீகத் திருமழை
ஆமப்பா ஆம்…
மழைப்போல் ஆறுதல் தருவது
வேறு ஏதுமில்லை !
2 – ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி
உறக்கம் கலைந்து
திடுக்கிட்டு எழுந்த ஹர்ஷிதா கேட்கிறாள்
” மம்மி, மண்டே வந்துடுச்சா
இப்போ ஸ்கூல் போணுமா?”
போதை தெளிந்து
மெல்லக் கண் திறந்து
கால்களை மடக்கிக் கொண்டு
சுருண்டு படுக்கிறாள் சிந்து
வயிற்றுத் தசைப்பிடிப்புக்கு
இதமாக
ஆடி அலுத்துப் படுத்திருக்கும்
சுகர் டாடியின் மேல்
ஏறி அமர்ந்து
அவனது காதைக் கடித்து
ஆணையும் இரைஞ்சலும் கொஞ்சலும் கலந்து
ஹஸ்கி வாய்சில் கேட்டு அசைகிறாள் இந்து:
” இன்னொரு ரவுண்ட் ப்பா…”
கறி சமைத்து
கணவனுக்கு தட்டில் கொட்டிக் கொடுத்து
மகளுக்கு ஊட்டி விட்டு
தான் சிறிது உண்டு
அயர்ந்து உறங்கிய சித்தாள் தேவி
சிரிக்கிறாள்
மெல்லக் கட்டி முடித்த
அவளது வீட்டின்
மொட்டை மாடியில் நின்று
பக்கத்தில் உறங்கும்
பேத்தியின் மொட்டைத் தலையில் இருந்து
நாசிக்குள் மெல்ல ஊரும்
சந்தன வாசம் முகர்ந்து
சிரித்துக் கொண்டே
” அப்பா… வந்துட்டீங்களா” என்கிறாள் சாம்பவி
அரைத் தூக்கத்தில்
மகனென வளர்த்த சிங்கங்கள்
தின்றது போக
கணவன் எனக் கட்டிய நாராச நரி
அடித்து மிதித்து கடித்துக் குதறியது போக
பேரன் என பிடுங்கித் தின்ற குரங்கு
பிராண்டியது போக
மேல்வீட்டு ஆடிட்டர் நாயின் மனைவி
நைச்சியமாய்ச் சுரண்டியது போக
எஞ்சி இருக்கும் உடலின்
காயத்தை
போனால் போகிறதென்று வளர்த்த மகள்
மருந்திட்டு ஆற்ற
தினமும் மாலையில் 4 மணிக்கு போடும்
T**cat மருந்தின் வீரியம் குன்றி
எலும்புகளுக்குள் ஊரும் சிறு பாம்பின்
பல்கடி தாங்காமல்
சிங்கத்துக்கும் நரிக்கும்
நாய்க்கும் குரங்குக்கும்
இன்னபல விலங்குகளின்
கோரப்பசிக்கு
துடிக்கத் துடிக்க இரையாக்கிய
சின்னஞ்சிறு பிஞ்சுகளின் கண்கள்
நினைவில் தோன்றித் தோன்றி நிறைய
விழியோரம் நீர் கசிய
“… ம்மா…” என முனகுகிறாள் காமாட்சி
குரல் : அன்புமணிவேல்
இந்த கவிதைகளை Spotify App -லும் கேட்கலாம்.