1. இசைக்கும் மூங்கில் மனம்
அறிந்துகொண்ட மௌனம்
அறியத் தந்த மௌனம்
இரண்டுக்கும் இடையே மிதந்துகொண்டிருக்கிறேன்
ஒரு கிறுக்கு மனதோடு
மிதக்கும் கணம்
கடக்கும் கனம்
கரை சேர்க்கிறது சேர்த்துச் செல்லாத நினைவை
ஒட்டிக்கொண்ட துகள்
ஓராயிரமாய் உருவேற்றுகிற ஒரு நொடி நுணுக்கம்
உயிர் செய்யும் அந்தப் பிரிவை
எப்படிக் கடப்பேன்
எதுவாய் முளைப்பேன்
வெட்டப்பட்ட மூங்கில் காத்திருக்கிறது
வெட்டுப்பட்ட துளை
புல்லாங்குழலாகாது கசிகிறது
மௌனமே
சிறு ராகமென நுழைகிற
உயிர் துளைக்குள்
நீ என் ஒன்பது பெரிய தவறு
போ
கட்டப்பட்ட அர்த்தச் சங்கிலி
வலிக்கிறது
தடம்
பதிகிறது
2. பேசாப் பொருள்
பாதிக்கப்பட்ட குரல்வளை திருகி
ஒரு பாடல் செய்கிறேன்
உனக்காக
இசை
இசை
என்கிறது உன் ராகம்
ஓர் ஒற்றுமை உருக்குலையும்
தூரத்தை
எப்படி மறந்தேன்
எதனால் மறந்தேன்
தொலைவுகளே
தொலைவுகளே
கொஞ்சம் கானல் ஆகுங்கள்
என்று மெட்டிடுகிறது
மனம்
கனவுகளே
கனவுகளே
கலையும் மேகம் ஆகுங்கள்
என்று மீட்டும் விரல் கோர்க்கிறது
அறிவு
மழை
மழையென அறிந்த பின்னும்
மீண்டும் நிறைகிறது பாத்திரம்
பித்து மனம்
பிடித்து வைத்த துடுப்பிற்குள்
தொலைய அலை வேண்டும்
மீளக்
கடல் வேண்டும்
துணை
துணை
என அனற்றுகிறது கைப்பிடி
பிடி..
துணை என்பது கால் அற்ற நிலம்
கை விடு
நான் அற்றுவிட்ட பாடல்
அங்கே
இசைக்கிறது
3. வனப் பாடல்
ஒரு கனவுப் பாடகனை
என் வனத்தில் கண்டேன்
ரீங்கரிக்கும் அவன் கண்களைப்
பார்
என்றது நல் மனம்
வேண்டாம்
வேண்டவே வேண்டாமென்றது
குறு மனம்
அச்சமூட்டும் சமிக்ஞைகள் அவனிடத்தில்
இல்லை என்பது
ஆசுவாசம் தான்
ஆனால்
எப்படிக் கடப்பேன்
சிறு தேன் துளி சிதறி ஓடும்
என் சிற்றாற்றை
வனம் இசைக்கிறது
இந்த கவிதைகளை Spotify App -லும் கேட்கலாம்.