cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 14 கவிதைகள்

யாழினி கவிதைகள்

யாழினி
Written by யாழினி

  • காதல்

கோடை மழையாய் புழுக்கத்தைத்
தணிக்க அவ்வப்போது
உன் குரலின் ஈரம் பூத்த தடத்தைப்
பதியமிட்டுக்கொள்வேன்
தனிப்பெரும் பொழுதுகளில்

விரல்களுக்கு பரிச்சயமில்லாத
உன் பெயரை எழுதிப்பார்ப்பதில் பதின்பருவச் சாயல் படர்கிறது
இப்பொழுதெல்லாம்

கனவுகளில் வந்துபோன தேவனைக்கண்டு
இதழ் பூக்கும் குழந்தையென
அவ்வப்போது கள்ளச்சிரிப்பில்
வண்ணம் குழைக்கிறது
களவு போன மனம்

என்னவும் நிகழ்ந்துவிடட்டும்
என் எதிர் இருக்கையில் வந்தமர்
பசித்திருக்கும் கண்கள்
கொஞ்சம் பசியாறட்டும்
உன்னைக்கண்டு.


  • கால நீட்சி

பெருவழிப் பாதையின்
குறுக்கே முளைத்து நீளும்
இச்சாலைதான் நம்மிருவருக்குமான
கரைந்துபோன காலம்

தைல மரங்கள் அடர்ந்த காட்டைக்
கடக்கும் ஒவ்வொரு முறையும்
சருகுகள் காற்றோடு சமராடும் ஓசை
காதல்கதைப் பேசி நரைவிழுந்த
நாட்களை மீட்டெடுக்கும்

வெய்யிலோடு போட்டியிட்டு
மஞ்சள் கொழிக்கும் ஆவாரம்பூவை
நீ தரும்போதெல்லாம்
கருப்பழகி எனப் பழித்த சொல்லில்
இசை கேட்ட நாள்
வந்து வந்து.. காதுரசும்

பிரிவு பழகாத நாட்களில்
எண்ணை அழுத்திவிட்டு
எதிர்முனையில் உன் குரல் கேட்டு
மௌனமாய் அழுந்த முடித்த கதைகளும்
நிறைய உண்டு

உனக்கும் எனக்குமான பாதையை
இப்போது கடக்கையிலும்
கண்ணீரின் பிசுபிசுப்பு
உள்ளங்கையில் ஒட்டுகிறது

உனக்கேதும் நினைவு வந்தால்
கவிதை ஒன்றெழுதி
காற்றோடு கரையவிடு
கால நீட்சியாய்


  • ஊடல்

ஊடல் நிகழும் தடயமின்றி
நகரும் இந்நாட்களின் மீது
பாசியின் வேர்கள் படர்கிறது.

ஒட்டுமொத்தத் தேவைக்கும்
வடிவெடுத்த உன் நேசத்தைக்
கொஞ்சம் கலைத்து விளையாட
கைகள் கெஞ்சுகின்றன.

பிரியத்தின் கணத்தைக்
கோப்பைகளில் நிரப்பித் தருகிறாய்
பால் கலக்காத பச்சைத் தேநீரின்
யௌவனம் அதில்.

கண்களில் நிறைந்து வழியுமதை
எதில் ஊற்றி நிரப்ப
இப்படித்தான் எங்குத் தொடங்குவது
இவ்வூடலை எனத்
தெரியாமல் விழிக்கிறது காதல்.

நானோ
உன் ஆள்காட்டிவிரலால்
அசைத்து விளையாடும்
தலையாட்டி பொம்மையாய்
அத்தனைக்கும் மறுப்பின்றி
மொழி தொலைக்கின்றேன்.

அதுவரை படர்ந்த சல்லிவேர்கள்
கொத்தாகக் களையப்படுகின்றன
உன் விழி படரும் பொழுதுகளிளெல்லாம்.


 இந்த கவிதைகளை Spotify App -லும் கேட்கலாம். 

About the author

யாழினி

யாழினி

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website