cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 14 கவிதைகள்

தேன்மொழி தாஸ் கவிதைகள்


  • எனது நாடு புனைவுகளின் புழுக்கூடல்ல

 

எனது மலைவாசஸ்தலம் நிமிர்ந்த கடல்
தன்னறிவு கொண்ட மாமுலைகள்
மனிதர்களைத் தாங்கிய தனு

எனது புலத்தைக் கைவிட மாட்டேன்

எனது நாடு புனைவுகளின் புழுக்கூடல்ல
மந்திரச் சங்குகள்
மண்ணுக்கடியிலும் முழங்கும்
எங்கள் மண்ணுக்கும் மனநிலை உண்டு

வில்லுப்பாட்டுக் காரியின் சொற்களில்
விரைந்து வரும் சத்தத்தில்
இம்மாநிலம் மூதாதையர்களின் மூச்சு
அவளின் நடுகற்களை
குலசாமிகளின் குலவையை
அடக்கமுடியாத நினைவுகளின் தீயை
பெரும்பாடுகளின் அடையாளங்களை
நதிகளின் வேர் தடங்களை
வளரி வீரம் பொங்கும் குரலை
உங்களால் களவாட முடியாது

பனைமரங்களிலேயே வாழ்வை முடித்துக் கொள்கிற
பாசாங்கற்ற மனிதர்களின் தவிப்பை ஆற்றும்
எந்த உயர்நிலைத் திட்டங்கள்
உங்களிடம் உண்டு சொல்லுங்களேன்

குறவர்களின் குரல்நெறியில் கிடக்கும்
கல்விக்கான-கல்வி வழங்கிவிட்டீர்களா
அவர்கள் எழுத்துருக்களை
அவர்களே கண்டடைய வழி கொடுங்கள்

நாடு கடத்தப்பட்டவனும்
நாட்டுக்குள் வந்தேறுபவனும்
ஏதோ ஒரு முதலாளியின் ஆமையோட்டுக்குள் திணறுகிறான்

முதலாளிகளின் மூளையில் நாடு
கேலிச் சித்திரமாவதே கொடுமை
மக்களை அடிமைப்படுத்துவதை விட்டு
அரசு முதலாளிகளை ஆள வேண்டும்

வந்தேறிகள் வஞ்சகமாய் கூட்டம் சேர்ந்து
விரட்டும் வரை
எனது நாட்டின் பூர்வக்குடிகள்
சகோதரத்துவம் பேணுவார்கள்

தொழிலாளிகளின் சதையால் நெய்யப்பட்டதே நாடு என்ற
நன்நெறி நரம்பு கொண்டோர் நாங்கள்

எனது நாட்டினை கிள்ளிப்பழம் போல
நீங்கள் அணுகுகிறீர்கள்
எந்த அணுவுக்கும் ஆச்சர்யம் ஏற்படுத்தக்கூடிய பூர்வத் தடயங்களை
அறியாமலே

என் மூளையில் தொங்கும் மலைத்தேனீக்களின் மொழிக்கூடுகளை
நீங்கள் கலைத்து விடுவீர்களா
பூர்வ நிலத்தை என் சகோதரர்கள் கைவிடமாட்டார்கள்

எனது தாய்நாடு நிமிர்ந்த காடு.


  • காடு அமைதியாக நடக்கிறது

பனியில் நடுங்கும் சிலந்தி வலையிடம்
பனிக்கு என்ன தேவை இருக்கிறது
இரவெல்லாம் பெய்யும் பனியிசை
புல்லின் மீது பனிக்கூடுகளை
எந்த பறவைகளுக்குக் கட்டுகிறது
தனக்கென எடுக்கத் தேவையின்றி இயற்கை உயிரன்பை கொடுக்கத் தவித்துக் கொண்டேயிருக்கிறது
தெளிவுநிறை சூட்சுமங்களை காளான்
குடைகளாக மண்ணுக்குப் பிடிக்கிறது
அரசவால் குருவியின் ஆட்சியில்
காடு அமைதியாக நடக்கிறது

உன்னதங்கள் யாவும்
எளிமையாக இருக்கக் கூடும்
தொட்டு உணர முடியாத யாவும்
நம்மை தொட்டு விடக் கூடும் .

 


  • மலைகள் பற்றற்று பாடுகின்றன

இந்நாளும் துளிர்த்து விட்டது
உவமையின்மையின் கொடியில்
விடிந்ததை அறியாது விழித்திருக்கிறேன்
புகழ் ஊற்றி பல் நனைத்துச் சிரிக்கும்
மனிதனர்களைக் கடந்த காலம்
மனதினடியில் புரண்டு படுக்கிறது
எனது தாய்மண்ணின் மாமலைகளை
ஏக்கத்தோடு இழுத்து தோளில் போட்டபடி
நீ என்றும் என்னைவிட்டு
நீங்காதிருப்பாய் என்கிறேன்
நகரத்தின் நெடியில் நெஞ்சடைக்கும்
தினம் ஒன்றை மடிக்கையில்
சுவரில் பல்லி குரலெடுத்துப் பாடுகிறது
சிட்சிட் சிட்சிட் சிட்சிட் சிட்சிட் – சரியாக இந்த நுண் துணுக்கு ஒலி அளவில்
சொற்களிட்டு ஒரு வரியை படைக்கலாம்
ஆனால் துல்லியமாக அது
பல்லியின் மன உணர்வாகுமா
வானளவு முள் கொண்ட துரோகங்களை
கடக்கிறது மனத் தந்தி
சுவரில் மீண்டும் குரலெடுக்கும் பல்லியை தாயாக நினைக்கிறேன்
வேறு வழியில்லை ~ தாயில்லை
இத்தவிப்பில் விழும் எதுவும் காலப்பூ
இகழ் ஊற்றி பல் நனைத்துச் சிரிக்கும்
மனிதனர்களை நிகழ்
காலச்சக்கரத்தில் ஏற்றுகிறது
வஞ்சகத்தில் வீழ்த்தமுடியாத என்
மனதில் வெயிலடிக்கிறது

மலைகள் பற்றற்று பாடுகின்றன
மெளனத்திற்கு மேலானது வானமில்லை
தீர்மானங்கள் ஏதுமற்ற வலியோன் பகல்
என்று பச்சயமாய்

பல்லியின் மன உணர்வில் பாடுகிறேன்
பசியற்ற துறவியே இறையே
மாமலையே
உலகின் உயிர் யாவும் துடிக்க
நீ நீங்காதிருப்பாய் .

 


  • பாதை

சரியான பாதை என்று நீங்கள்
எதைச் சொல்வீர்கள்
ஏற்கனவே எவரோ தெளித்த பாதையா
அல்லது நீங்கள் புதுப்பித்த பாதையா

எவரோ தெளித்த பாதையில்
எத்தனையோ பேரின் சம்மட்டி அடியும் சில சத்தியங்களும் இருக்கலாம்
தவறான பாதையின் முட்டுச் சந்தும் இருக்கலாம்

புதுப்பிக்கும் பாதை ஒன்றின் புலம்
எத்தனையோ கிளை சாலையோடு
தொடர்பு கொண்டிருக்கலாம்
அவை தவறானதாகவோ
சீர்குலைவின் சிக்குகளோடோ
படுகுழிச் சுழியோடோ கூட இருக்கலாம்

எனில்
சரியான பாதை என்பது எது

எந்த எதிரிகளாலும் அழிக்கமுடியாதபடி
காலத்தோடு காலத்துக்குகந்த தத்துவத்தோடு
உயிர்மை நேய உண்மையோடு இயற்கைக்குள் உற்று நோக்கி பாய்தல்.


  • சுயம்

சுயம் பெறுகத் தவிப்பது
படர விளைவது முன்னிருத்துவது
சுயமின்றி இங்கே ஒரு புல்லும் நிமிர்வதில்லை
எல்லா உயிருக்குள்ளும் உயிர்ப்பே சுயத்திலிருந்து தொடக்கம் பெறுகிறது
ஆகச்சிறந்த சுயநலம் பொதுநலமாக உருமாற்றம் அடையும் வல்லமை கொண்டது
சுயம் புனிதமுமில்லை அருவருக்கத்தக்கதுமில்லை
கேடானதுமில்லை
விழுக்காடு அதிகரிக்குமானால்
சுயம் மரியாதையை இழந்து விடும்
சுயநலமிக்கவர்களின் தந்திரம் அபாயகரமானது


கவிதைகள் வாசித்த குரல் : அன்புமணிவேல்.

இந்த கவிதைகளை Spotify App -லும் கேட்கலாம். 

About the author

தேன்மொழி தாஸ்

தேன்மொழி தாஸ்

1976 இல் மேற்குத் தொடர்ச்சி மலையில் மணலாறு என்னும் தேயிலைத் தோட்டப் பகுதியில் தேன்மொழி தாஸின் இயற்பெயர் சுதா. 1996-களில் எழுதத் தொடங்கியவர். இவருடைய முதல் கவிதைத் தொகுதியான இசையில்லாத இலையில்லை (2001) தேவமகள் அறக்கட்டளை விருது, சிற்பி இலக்கிய விருது, திருப்பூர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது கவித்தூவி விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளது. அநாதி காலம் (2003), ஒளியறியாக் காட்டுக்குள் (2007) , நிராசைகளின் ஆதித்தாய் (2016) , காயா (2017 ) வல்லபி (2019) ஆகியவை இவருடைய பிற கவிதைத் தொகுப்புகளாகும் . இவர் ஒரு சிறுகதையாசிரியரும்கூட. ஈரநிலம் என்னும் திரைப்படத்தில் பாடல்களும் உரையாடலும் எழுதி, உதவி இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார். உரை நடை ஆசிரியராகவும் , பாடலாசிரியராகவும் இணை இயக்குநராகவும் தமிழ் திரை உலகில் பணியாற்றுகிறார் .இவர் உரையாடல் எழுதிய முதல் திரைப்படமான ஈரநிலம் என்ற திரைப்படத்திற்கு தமிழ்நாடு அரசு சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதினை 2003 ஆம் ஆண்டு வழங்கியது ,

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website