cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 14 கவிதைகள்

பருவமழையும் பாதி இரவும்


பொத்தி வைத்த மாயக்குவளைகளை
உடைத்தெறியுது வானம்.
தலைகவிழ்த்த ஒளிக்குமிழியின்
முன்றிலில் துள்ளும்
பெதும்பை மழை.

ஈரம் தோய்ந்த நகரத்தின்
நிச்சலனம்.
காற்றும் , கூதலும்
கத்தை கத்தையாய்
குடையும் நினைவுகளும்.

சில நகரங்களுக்கும்
உணர்வுகளின் நாளங்கள்
இருப்பதை உணர்கிறேன்.

பாதி கடந்த இரவுகளில்
சட சடக்கும் மழைத்திவலை,
சர்வமும் சுருட்டிக்கொண்ட
நகரத்தின்,இரவுப் பாட்டாய்
அழக் கூடச் செய்கிறது.

நல்ல நிலா நாள்:
கப்பிக்கிணற்றோடு சாய்ந்த
தென்னை.
கீற்றுகளூடும் வெளிச்சம்
சொட்டச் சொட்ட,
விழித்துக் கிடக்கும் கொல்லைத் தரை.
இப்போது எப்படி இருக்கும்?
மனது ,
கோட்டானாய் கூவித்திரிகிறது.

கூரை ஓடுகள் தடத் தடக்க
கொட்டித் தீர்த்த நாளொன்றில்,
பலமுறை வாசித்த,
பச்சை அட்டைப் புத்தகமும்
பழுப்பு நிறப் பக்கங்களும்.
காணாமல் போன இடம் தேடி ,
கனவெல்லாம் அலைகிறேன்.

சந்தடி தூங்கிய வயல்.
வடியும் வாய்க்கால்.
வாய் ஓயாத தவளைகள்.
மழை இருட்டு போர்த்திய ஊர்.
சில்வண்டுச் சத்தம்.
இவை சேர்ந்த பொழுதொன்றில்
இசைத்த வானொலி.
முதல் வரி மறந்தும் -இன்னும்
முடியாமல் கேட்கிறது.


 

About the author

சமீ பாத்திமா (சமீரா)

சமீ பாத்திமா (சமீரா)

இலங்கையைச் சேர்ந்த சமீரா தற்போது இங்கிலாந்தில் வசிக்கிறார். பாடசாலைக் காலத்திலிருந்தே கவிதை எழுதுவது பிடிக்கும் எனவும் தான் துறை சார் கவிஞர் அல்ல. ஆனால் கவிதை சில பேசாத உணர்வுகளுக்கும் உருவம் கொடுக்கிறது என நம்புவதாகவும் தெரிவிக்கிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website