cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 14 கவிதைகள்

சந்திரா மனோகரன் கவிதைகள்


  • திறந்த காலம்

நுணுக்கமானது அந்தத் தழும்பு !
உன்னை மீட்டெடுக்க கடந்தகாலத்துக்குள் பயணிக்கிறேன் .
அது நுட்பமானது !
சொட்டுச் சொட்டாய் என் உறக்கம் கலைகிறது
திராட்சைக்கொத்துபோல் செடியில் தொங்கிக்கொண்டிருப்பாயே !

உன்னைப் பார்க்க வரும்போதெல்லாம்
நீ விழித்திருக்கவில்லை .
உன் இமைகள் கண்மூடித்தனமானது !
ஆழ் மௌனத்துக்குள் என் இரவு கழிகிறது
என் சதையில் உலராத தழும்பாய் நீ !

வானம் கொட்டும் குளிர்ந்த நீர் துளைத்தாலும்
ஓர் அரக்கனைப்போல் சிதைத்தாலும்
நீ நெடுங்காலம் தங்குவதற்கு
உனக்கு உகந்த இருப்பிடம் அது
நீ முகாமிட்ட இடம் வர்ணம்பூசப்பட்ட
வானவில்போல் பரவசத்தில் மிளிர்கிறது
விரைவில் உன்னை எட்டிப்பிடிப்பேன் ,பாரேன் —
என் திறந்த காலம் அதன் அடையாளத்தை இழப்பதற்குள்

இருண்ட காற்றினூடே எப்படியோ கடந்துகொண்டிருக்கிறேன்
கண்ணுக்குத் தெரியாத பாழ்வெளியில் உன் பாடல் கண்சிமிட்டுகிறது
இப்போது மெல்லக் கைகோர்க்கப்போகிறோம்

வாடலும் வாதிப்பும் இனி இல்லை
வாழ்வு மாதுரியம் மிக்கது
மாயரூபம் மாய்ந்தது
பழைய சாயல் அற்றது

படபடக்கும் உன் கன்னம் ,வாடாத தழும்பை வருடும்போது ,அது
இரு புதிய தாவரங்கள் முகிழ்க்கும் பர்ணசாலை ஆகிறது .


  • முதுமரம்

அவள்மீது ஒரு குடைச்சிப்பிபோல் கவிழ்ந்து கிடந்தது போர்வை .
அகற்றியதும் அங்கே —
பதுமைபோல் உறங்கிக்கொண்டிருந்தது , தனிமை
தூங்கிருளில் கிடந்தாலும் …. அது
வாடாத பசுந்தளிர் !
அதன் அகண்ட வாயும் விரிந்த விழிகளும்
அறையின் காற்றுவாரியை வெறித்துப் பார்த்தன
உலர்ந்த ரொட்டியும் வறண்ட கோப்பையும்
காய்பசியில் அவளை மீட்கக் கூடுமோ?

கட்டிலில் பொதிபோல் குந்தியிருந்தது விரக்தி

விசிறியடிக்கும் சூறாவளியில் அணைந்துபோன
விளக்குப்பற்றி இருட்டில் அருவமாகிப்போனவளுக்கு
விளக்கம் தரவேண்டியதில்லைதான்

முதுமரம்போல் நிற்கிற என்னைப்பார்

அற்றை அற்பம் இல்லை
சிறுமையில் அஞ்சி அஞ்சி …
சுயத்தை … காதலை .. காலத்தை உறங்கவைத்தோம்
எவ்வளவு அனர்த்தம் அது !
நம் திடசித்தமோ முடக்கப்படவில்லையே !

எதாப்பிரகாரமாய் உலகம் சுருங்கிப்போய்விட்டது
தீக்கொள்ளிகளுடன் அலையும் துப்புக்கெட்டவர்கள்
கைமிஞ்சிப்போய் ஆளற்ற சிறுகுடிலை எரிக்கின்றனர் .

கொழுந்து விட்டெரியும் கனலியில்
கருகாமல் கிடக்கிறது பறவையின் இறகொன்று


.

About the author

சந்திரா மனோகரன்

சந்திரா மனோகரன்

தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த சந்திரா மனோகரன் வேளாண் பொறியியல் துறையில் கண்காணிப்பாளராக பணி புரிந்தவர். இதுவரை கவிதை , கதை , புதினம், கட்டுரை, மொழிபெயர்ப்பு என 38 நூல்களை எழுதி உள்ளார். அண்மையில் 'அசையும் இருள் ' கவிதை நூலுக்கு தமிழ்நாடு அரசின் ' நற்றமிழ் பாவலர் விருது ' , தவிர , வெவ்வேறு இலக்கியப் போட்டிகளில் பரிசுகள், பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website