cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 14 கவிதைகள்

செ.புனிதஜோதி கவிதைகள்


1

  • அரூபத்தின் நாடி 

பிச்சியின்

மணத்தைச்

சுவாசிக்கையில்

அந்த அன்பு

போதுமானதாய்

இருக்கிறது.

 

வாதமரத்தடியில்

தலைசாய்ந்து

கொள்கையில்

அந்த வருடலே

போதும்.

 

நட்சத்திரங்களின்

மத்தியில்

பேசியதில்

வருவது

 நிறைவு.

 

 மாற்ற

முயற்சித்து

 தேற்றி 

வெளிவந்த

போதிலும்

கருங்கடலுக்குள்

நாடோடியைப்

போல்

மீச்சிறு

அன்பைத்

தேடிக்

கொண்டிருக்கும்

நிலவை நோக்குகையில் 

அழுது விடுகிறேன்

உடைந்து.

 

2
  • தாயுமானவள்

தன் இளம்

பருவத்துப்பெண்ணின்

கரம்பற்றி 

குழந்தையைப்போல்

வேகமாக 

இழுத்துச்செல்கிறார்

 

மயிலிறகைப்போல் 

 கரத்தை விலக்கி

அவர் கரத்தைப்பற்றிப்

பாதுகாப்போடு 

அழைத்துச்செல்கிறாள்

 

மேய்ப்பனைப் பின்தொடரும்

ஆட்டுக்குட்டியைப்போல் 

புன்னகையோடு

மகளின் கரத்தைப் 

பார்த்த வண்ணமே

சாலையைக்கடக்கிறார்

 

குடமுழுக்கில்

புண்ணிய நீரை

பெற்ற கலசத்தைப் போல்

உயர்கிறது சாலை

 

கண்ட தரிசனத்தில்

எனக்குள்ளும்

நிகழ்கிறது

மூலவரின் ஊர்வலம்.

 

3

கருணையுள்ள 

மொழியால்

அந்தச் செடிகளோடுப் பேசிக்கொண்டிருக்கிறாய்                      

உன் பார்வையின் ஈரத்தில் 

மஞ்சணத்தி மலர்கிறாள்


தென்றலற்ற நாளில்

அசைவுகளற்றக் கிளையை

பார்த்துக்கொண்டிருக்கிறாய்

தோள்களில் 

அமர்கிறது பட்டாம்பூச்சி 


சுற்றிலும் சொற்கள்

ஆனாலும் 

எனக்குள் சுழல்கிறது 

உனக்கானச் சொற்கள்

கொத்தி உண்ண 

 பறவையாய் வருகிறாய்

தானியமாகிறேன்


நீரோடையைப்போல்

எனக்குள் 

நடந்துவருகிறது என்காதல் 

எதிர்த்திசையில் வருகிறாய் 

 துள்ளல் போடுகிறது

விழிகளின் இறக்கையில்

கடல் அலை.

4
  • மௌனத்தின் வேர்

சொல்லாமல் இருப்பதையும்

 கேட்காமல் இருப்பதையும்

அழகாய் வரைந்து காட்டுகிறது

நமக்கிடையேயான

 புன்னகை

 

பியானோ கட்டையில்

குதித்து விளையாடும்

விரல்களைப் போல்

 நடந்து செல்கிறது

ஒரு பறவை

 

ரகசியங்களை உடைக்க முடியாமல்

திணறும் வேளையில்

இன்னும் அழகாகிறது நமக்கிடையேயான இசை

 

கரைபுரண்டு

ஓடுகிறது மேகம்

 மொழிபெயர்க்கத்

தெரியாமல் வேடிக்கை காட்டுகிறது

நமக்கிடையேயான வானம்

 

நாணத்தை முகத்திற்கும்

சொற்களை முதுகிற்கும்

தேநீரில் கலந்த சுவையை

விழிகளால் நிரப்பிக்கொள்கிறோம்

 

குழந்தைகள் கலைத்துப்போட்டு விளையாடும் வீடு

ஓவியமாவதைப் போல்

நமக்கிடையேயான விளையாட்டும்

கலையாகிறது.

 

  • வீடுபேறு

தனித்து விடப்பட்ட

அந்த இல்லத்தில்

அன்றைய

சொற்களையும்

இன்றைய

 வேதனையையும்

நினைவு உளியால்

செதுக்கிக்

கொண்டிருந்தாள்

 

வாழ்வியல் ஓவியங்கள்

சுவர் முழுக்க.

 

முதலாம் 

நினைவு 

நாளில்

அவனது

சுற்றங்கள் சூழ

சொற்களால் நிறைந்து 

கிடந்தது 

இல்லம். 

 

சுவரும்

அவளும்

விடுதலையாகி இருந்ததை

உணரமுடிந்தது

 

மின்மினிகள்

நிலைப்பா?

நீடிப்பா?

எந்த

தவிப்பிலும் 

சிக்கிக்

கொள்ளாத

இன்றைய பொழுதைக்

கொண்டாடி

விட வேண்டும்

 

கலையும் மேகத்தைக்

கவிதையாக்கும்

முயற்சி 

அறிந்ததுதான்.

 

தனிமைச் சாலைக்கு

நிழல் உலர்ந்த விதையைச்

சேகரித்துக்

கொண்டிருக்கிறாள்

 

விடைபெறுவதற்கு முன்னே 

அவளிடம்

எப்படியாவது கற்றுக்

கொண்டுவிட

வேண்டும்

வாழ்வின் எச்சங்களை.


 இந்த கவிதைகளை Spotify App -லும் கேட்கலாம். 

About the author

செ.புனிதஜோதி

செ.புனிதஜோதி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சார்ந்த புனிதஜோதி தற்போது வசிப்பது சென்னையில் . M.A பட்டதாரியான இவர், இதுவரை
நான்கு புள்ளிகளும் நான்பது கோலங்களும், சுப்புவின் கனாமகள், நிழல்களின்இதயம்,மௌனக்கூத்து ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். பல்வேறு தொகுப்பு நூல்களிலும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

கணையாழி, கொலுசு, நவீனவிருட்சம், படைப்பு கல்வெட்டு , வல்லினச்சிறகுகள், இனிய உதயம் உள்ளிட்ட இதழ்களில் இவரது கவிதைகள் பிரசுரமாகி உள்ளன.

கவிதைகளுக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார், பல்வேறு தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட கவியரங்க நிகழ்வுகளிலும், பல்வேறு அமைப்புகள் நடத்திய கவியரங்க நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று கவிதைகள் வாசித்ததோடு பல்வேறு இலக்கிய அமைப்புகளிலும் உறுப்பினராக உள்ளார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website