ஆந்தையும் உறங்கிய சாமத்தில்
குருதி வாடைக்கு
விடாது குரைத்தபடி இருக்கின்றன நாய்கள்
வஞ்சத்தில் வீழ்ந்த காதலின் முன்
தேர்வுகளற்ற ஒரே முடிவு
அவள் கண் பார்க்க
அவன் கொஞ்சம் கொஞ்சமாய்
கொல்லப்படுவதாய்.
துணுக்குற்று வவ்வால்கள் பறக்க
ஊரின் கோடியில்
தலைகீழாய் தொங்கியது
தற்கொலை செய்துகொண்ட பிணம்.
மரம்நட தோண்டிய பள்ளத்தில்
முளைக்காத விதையென இருந்தது
எலும்பொன்று.
அதன் கணுக்காலில்
அக்காவோடு தொலைந்த
வெள்ளி மயில் கொலுசு
எதையோ உறுதி செய்த சின்னவள்
விதைத்து மண்மூடி
நீர்விட்டு வந்தாள்
அடுத்த ஆறாம் மாதத்தில்
வாசலெங்கும் முத்துக்களாய் வீழ்ந்திருந்தாள்
அக்கா .