- மேலும் அங்கு யாரும் கிடையாது
சும்மா ஒரு பகலின் கைப்பிடியில்
இந்த அறை இருக்கிறது
வெளிச்சத்தை அனுமதிக்கும் வழக்கமில்லை
நிழலின் பாவனைகள் மடித்து வைக்கப்பட்டிருக்கின்றன
சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் மௌனத்தை
அப்புறப்படுத்தும் சுவாரஸ்யம் அற்று
எழுதுவது நின்றுவிட்டிருக்கிறது
இந்தக் காட்சியின் அவலத்தை
எவரேனும்
சாவி துவாரங்களின் வழியே வேடிக்கைப் பார்ப்பதை
வெறுக்கிறேன்
ஒரு லிஃப்டுக்காக நீங்கள் காத்திருக்கும் வேளையில்
இந்தப் பக்கம் நோட்டம் விட
ஒன்றுமில்லை
தரையிலிருந்து உயர்ந்து திரும்பிவரும்வரை
உங்கள் பகலின் கைப்பிடியில் நீங்கள் ஏன் இல்லை
என்கிற கேள்வியை
தன் கையில் வைத்துக்கொண்டு காத்திருக்கும்
உங்கள் அறை
- தொலைவில் ஒரு காடு உண்டு
நாளையை இட்டு நிரப்பிக்கொள்ள
ஓங்கி வீசிக்கொண்டிருக்கிறது மௌனம்
சத்தியத்தின் மலையுச்சியில்
சொல்லாதவைகளை இனியெப்போதும் சொல்வதாக இல்லை
இதுவரை உன்னிடமிருந்து பெற்றுக்கொண்டவை
துயர் தருபவை
தனிமை இரவின் கழுத்தைத் திருகி உயிர் குடிப்பவை
எனது நிழல்களும் பின்தொடர விரும்பாத பாதைகளில்
இனி இருக்கப்போவதில்லை
தடங்கள்
பொருள் குறித்த பாவங்களின் சலிப்போடு
இந்த முகம் உலர்கிறது
நா உலர்கிறது
தொண்டை உலர்கிறது
வார்த்தையும் உலர்கிறது
மணலென திரிந்து உயரும் மனதின் வெம்மையில்
இளைப்பாறிட உச்சியிலிருந்து
சற்றே நகர்ந்துகொள்கிறேன்
அர்த்தமிழந்த சிறு பாறையாக
- நெடுநாள்
காத்துக்கொண்டிருக்கிறாள் அவனல்லாத இடத்தில்
ஒரு பைக் வருகிறது
ஹாரன் ஒலி அலற பாதையை உருட்டிக்கொண்டு
பாய்ந்தோடுகிறது
பின்னிருக்கையில் யாரையும் சுமக்காமல்
அடைத்துக்கொண்டு ஒரு பேருந்து வருகிறது
சுழன்று திமிரும் கரும்புகையோடு கடந்துபோகிறது
கசகசவென்று ஒரு மனித நேரம்
துளிகளில் தொடங்கி
மெல்ல கனத்து
சட்டென
ஆழங்கட்டி மழையொன்றும் வருகிறது
நடைபாதை கான்கிரீட்டில் மோதி சிதறுகிறது
அதுவரையிலான வெயில்
அதுவரையிலான மௌனம்
அதுவரையிலான வலி
அதுவரையிலான காத்திருப்பு
- இங்கே வா..
தவிப்பின் புற வாசலில்
சிறு சிறு மலர்களாக பூத்திருக்கின்றன
உனது பழைய வருகைகள்
நீரூற்றி இன்னும் கொஞ்சம் வளர்த்திட
குவிக்கிறேன் உதடுகளை
இச் என்ற ஒலிக்குறிப்போடு
பறந்துகொண்டிருக்கிறது
மனம்
கவிதைகள் வாசித்தவர் : அன்புமணிவேல்
இந்த கவிதைகளை Spotify App -லும் கேட்கலாம்.
தனித்துவமான கவிதைகள்