- மழைக்கால தவளைகள்
மழை விட்டபாடில்லை
தவளைகள் வயலின் அடிவயிற்றை
திருகி அழுகின்றன
முதலில் பெருந்துளிகள்
பிறகு சிறு சிறு கற்களென ஆரம்பித்து
இப்போது பெய்பவை பாறாங்கற்கள்
காலம் ஓடி ஓய்ந்துவிட்டது
மழை இன்னும் விடவில்லை
வயல்கள் தவளைகளின்
தலைகளை திருக ஆரம்பித்து விட்டன
இந்த பாறாங்கற்கள் அவ்வளவு இதமாயில்லை
இப்படியே எத்தனை நேரம்தான்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பாய்
காமமே…
குரல்வளையைப் பின்னிக்கொண்டு நிற்கும்
தனிமைக்குள்தான் எத்தனை ஓட்டைகள்
தொப்பலாக நனைந்து நிற்கிறேன்
இனியும் உன்னை நம்பி பயனில்லை
நான் எப்போதோ தவளைகள் மிதக்கும் வயலாகிவிட்டேன்
பாறாங்கற்கள் நசுங்கி சிதற சிதற
தவளைகள் குரல் ஒடிந்து ஓயட்டும்
இறுதியில் இருவரும்
பெருமூச்சொன்று விட்டுக்கொள்வோம்.
- மனமெனும் ரயில் வண்டி
அது ஒரு ரயில்
விஸ்தாரமான நெடுந்தொடர் உருவம் அதற்கு
சில நேரங்களில் ஓடவும்
சில நேரங்களில் பறக்கவும் செய்யும்
ஓடும்போது ஒரு நரியைப்போலவும்
பறக்கும்போது பெரும் கழுகைப்போலவும்
தோன்றும்
பெரும்பாலும் ஓரிடத்தில் அது நிற்கும் குணமில்லை
நைந்த குப்பைகளை கிளறிச்செல்லும்
அதற்கு நீங்கள் மனமென்று பெயரிட்டு கொண்டால்
நான் பொறுப்பல்ல.
- பொல்லா பூனை
பூட்டியே கிடக்கும் வீட்டுக்குள்
பொல்லாதப் பூனையொன்று சுற்றி வருவதாக
ஊரில் பேசிக்கொண்டனர்
இருளில் கருப்பு நிறமாகவும்
பகலில் ஒளியின் நிறமாகவும்
மாறும் தன்மை கொண்ட அது
ஊருக்குள் சுற்றும் வதந்தியில்தான்
ஊன் வளர்த்து வந்தது
நன்றாக கேளுங்கள்
அது பொல்லாத பூனைதான்
மேலத்தெரு சிவாவும் கீழத்தெரு அம்சாவும்
மழைக்கு ஒதுங்கிய ஒரு நாளில்
உறங்கிங்கொண்டிருந்த அந்த பூனை
விழித்துவிட்டது
பிறகென்ன?
ஊரில் காணாமல் போகிறவர்களையெல்லாம்
அந்த இல்லாத பூனைதான் தின்று சலிக்கிறதாம்
பொல்லாப் பூனைதானது.
இந்த கவிதைகளை Spotify App -லும் கேட்கலாம்.