- மனிதக்கலை
குண்டுகளை
ஒவ்வொன்றாகத் தூக்கி எறிய
அடங்காத வெறி அவசியமாகிறது.
அகண்ட வெளி
திறந்த பாலைவனம்
ஆறாத வெயில்
நினைத்தாலே குளிரும் பனி
என ஒவ்வொன்றாய்
மன்னிக்கப்படுகிறது.
மீள வாசிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட
தோட்டா துளைக்காத
நிலமொன்றில்
புத்தக வாசனை
மறிப்பின் பாதையில் சென்று கொண்டிருக்க..
மரங்கள் உலர் காற்றை
இரைத்துக் கொண்டிருக்கிறது.
சீனச் சுவரின் நீளத்திற்கு
ஒரு மின்னல் கத்தியை
கவளங்காய் உருட்டி,
குண்டுகள்
செய்யப்பட்டுள்ளன.
எந்நேரமும்
குண்டுக் கத்திகள்
பூமியின் முழுநீள உருட்டிற்கு
வீசப்படலாம்…
புல் பூண்டு களையற்ற
உலகத்தை மனிதன் இவ்வாறு
தான் செதுக்குகிறான்.
- அப்பாவிற்குப் பிறகான நான்
எழுப்பி விட்ட அத்தனை நினைவுகளிலும்
உன் தடயங்கள்
வீழும் சுடராகவே இருக்கின்றன.
பாறைகளின் நீட்சிக்குப் பயந்து
மரித்த கற்துகள்களாய்
நினைவுகளின் ரணங்களிலிருந்து
தப்பி ஓடுகிறேன்.
பேருந்தின் ஜன்னலில் அடிபட்டு வீழும்
மரக்கிளைகளுடன்
என்னுடைய ரணங்களும்
ஒடிகிறது.
பாதத்தடங்கள் படாத செங்கல் கோடுகளுக்குள்
ஒளிந்து கொள்கிறேன்.
நினைவுகளின் தடயங்கள்
ஒட்டியிருக்கும்
அந்தக் குளிர்ந்த தேகத்தில்
அப்பாவின் நெற்றியை உரசிய கடைசி
ஸ்பரிசம் இன்னும் காயவில்லை.
நினைவுகளை எப்படி அழிப்பது?
அப்பா
- வாடல்
தேன் சிட்டு ஒன்று மரத்தில்
தினமும் தேன் குடித்தது.
நான் ரசித்துக் கொண்டும்
இருந்தேன்.
தேன் குடிக்கும் சிட்டுக்கு
என் மேல் எந்த சலனமோ
பயமோ இல்லை.
அது என்னைக் கண்டு
கொண்டதாகவே நான் அறியவில்லை.
நொடிக்கு ஒரு இதழ் முத்தம்.
பருகிக் கொண்டே இருந்தது.
இன்னுமொரு நாள் அந்த
மரம் வெட்டப்பட்டது.
மலர்கள் இல்லை.
சிட்டு தேன் குடிக்க
அந்த இடத்தையே
வட்டமிட்டது.
தினமும் கவனித்தேன்.
அது வந்த வண்ணமே இருந்தது.
எந்த ஏமாற்றமும் அதன்
முகத்தில் தென்படவில்லை.
தினமும் வந்தது.
தினமுமே அந்த இடத்தில்
எவ்வித மலரும் இல்லை.
என்னிடமும், அதனிடமும்
அன்றைக்கு இருந்த
எவ்வித காதலும் இல்லை.