- வரைபடம்
முகாம்களைச் சுற்றிலும்
மதில்கள்
எழுப்பப்பட்டிருக்கின்றன
பிறந்த நாட்டில்
அகதிகளென
பெயரிடப்பட்டவர்களுக்கு
நீளம் தாண்டுவதற்குப் பயிற்சி அளிக்கப்படுவதில்லை
வானுயர்ந்த கட்டிடங்கள்
விலங்கிடப்படாத
சிறைச் சாலைகளாக இருக்க
புதிய புதிய சட்டங்கள்
மனிதத் தலைகளை
எண்ணுவதிலேயே முனைப்புக் காட்டுகின்றன
அதிகாரிகள் வருவதற்கான
முன்னேற்பாடுகள்
மக்களை கதவுகளிலிருந்து மீட்டு
புளிப்பில்லாத உணவின் வாசத்துக்குள் புகுத்திவிடுகிறது
வாழ்வதற்கென்ற
அடையாளச்சீட்டுகள்
கிழிந்த சட்டைப் பைகளில்
திணிக்கப்படுகின்றன
தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டு
தேசத்தின் கைகளில்
பச்சை குத்தப்படுகிறது
இப்போது
சட்டத்திற்குச் சாட்சியாய்
உயிர் மட்டும் அழுந்திக் கொண்டிருக்க
முழுமையாகத் தரவிறக்கம்
செய்யப்பட்ட பெயர்ப்பட்டியலில்
ஒதுக்கப்பட்ட எண்ணோடு
வரிசையில் நிற்கிறேன்
மதில் தன் வாயில் பூட்டுகளை
மீண்டும் ஒருமுறை
இழுத்துப்பார்த்துக் கொள்கிறது.
- அஸ்திவாரம்
நகர்ப்புறக் குடியிருப்பில்
எத்தனையாவது மாடியோ தெரியாது
வாழ்க்கையின் அஸ்திவாரத்தை
அங்குதான் போடவேண்டும்.
இரவின் அருவிகள்
போல உறங்க முயற்சிக்கிறேன்
எந்தத் திசையில்
தலைவைத்து உறங்கியும்
புதிய தோரணைகள்
கண்களுக்குப் புலப்படவில்லை.
நகரச்சுவர் எழுப்பும்
சத்தங்கள்
எதிர் வீட்டு ஜன்னலுக்குக்
கூட கேட்பதில்லை
பெருமைதான் உயரமான கட்டிடத்தில் வசிக்கிறேன் என்பது
அலைபேசயில் பதிவு செய்தால்
கிடைத்துவிடுகிறது
ஏ டூ இஸட் வரை
கூகுளின் புதிய வழியாக வந்து
சேர்கிறது அத்தனையும்.
நிம்மதியான
தருணமென்பது
அகப்படாத கைதியாக ஓடிக்கொண்டிருக்கையில்
ஒரு சூழல்
நின்று பேசுகிறது
எதற்காக
இங்குவந்து
அஸ்திவாரத்தைத் தேடுகிறாய்
எதிர்காலம் என்பது வெற்றுச் சொல்
அத்தனைக்கும் ஆசைப்படாதே
நின்ற இடத்தில் விளையாடு
அவசரம் கருதி
உன்னை
நிகழ்காலப் பந்தாட்டத்தின் ரெப்ரியாக்கி விசிலை ஊது.
நிதர்சனம் அதுதான்
உன் கோட்டையில்
உனது கொடியின்
பறத்தலில் இருக்கிறது
நாளையின் முடிவு!
- நம்பிக்கைச் சுவர்
நம்பிக்கை ஒரு மாயப் புள்ளியைத்
தொடுகிறது.
புள்ளி
நகர்ந்து இருப்பிடத்தை நிரப்புகிறது
தோதான என் மனதினை அசைத்து
சிலாகித்துப் பேசி சிரிக்க
நான் நம்பிக்கையானேன்
நம்பிக்கையின் பயணம்
ஊர்ந்தபடியே
வெற்றியின் அரண்மனையில்
குடிபெயர்ந்திருக்கிறது
இப்போது அதற்குள் வேர்களின் தன்மையை உணர்கிறேன்
மண் வாசம் கலந்த நீரை அருந்துகிறேன்
தேக நதி
பகல் இரவின் நிகழ்வுகளை
குறிப்பெடுத்துக் கொண்டே இருக்கிறது
சம்பவங்கள் யாவும்
வணிகமாக மாற
விரும்பிய திசையில் பயணிக்கிறேன்
ரகசிய வாழ்வின் நெருக்கடிகளை
நம்பிக்கை சுவர்களில்
எழுதி வைக்கிறேன்
நீண்ட வரலாறென்பது
புள்ளிகளில் தொடங்கி
புள்ளிகளாகவே நீள்கிறது!
வரைபடம் என்றும் தலைப்பில் உள்ள கவிதை நாடில்லாத வாழ்வை பிரதிபலிக்கிறது , மிகவும் அருமையான கவிதைகள் வாழ்த்துகள்
அட்டகாசமான ஆரம்பம்.
வாழ்த்துக்கள்.
அருமையான கவிதைகள் தேர்வு. மகிழ்ச்சியான துவக்கம்.
அருமையான கவிதைகள் தேர்வு. மகிழ்ச்சியான துவக்கம்.