தினம் ஒரு காத்திரமான கவிதையை எனக்கு
சமர்ப்பிப்பேனென சொல்
நான் மரிக்கத் தயார்
உன் மறு துணையிடம்
என்னை மறக்கத் துணிவில்லையெனப் புலம்பு
நான் மரிக்கத் தயார்
என் இன்மையில்
என் மாயபிம்பத்துடன்
உரையாடியபடி இருபேனெனச் சொல்
நான் மரிக்கத் தயார்
என் பிள்ளைகள் நினைவிலிருந்து
என்னை முற்றிலுமாக
நீக்கி விடுவேனென சொல்
நான் மரிக்கத் தயார்
என் மூச்சு உனைத் திணறடிப்பதாகவும்
என் வியர்வை உன்னைத் துரத்துவதாகவும் சொல்
நான் மரிக்கத் தயார்
எல்லாமவள்களிலும்
என்னைக் காண்பதாய் பிதற்று
நான் மரிக்கத் தயார்
எனக்குப் பிடித்தமான
உணவுகளையே
தினமும் உண்டு
பருத்துப் போவேனென சொல்
நான் மரிக்கத் தயார்
இவற்றில் ஒன்றே ஒன்று
உன்னால் முடியாதெனினும்
உன்னை ஆட்கொள்வேன்.
என் பணிச்சுமையில்
சிறு உதவியாய்
என் பயணச்சீட்டுக்கள்
பதிவேற்றித் தருகிறாய்
மிகச்சரியாக
பேருந்து புறப்படும் நேரம் அழைத்து
‘பத்திரம்’ என்கிறாய்
போதாததற்கு
நடத்துநரிடம் தரச்சொல்லி
எனக்கு
இல்லாத சர்க்கரை நோயை
இருப்பதாய் சொல்லி வைக்கிறாய்
‘முதல்முறை பயணிக்கிறீர்களா மேடம்;
சார் ரொம்ப பயப்படுறார்’ என்றவர்
சினேகமாய்ச் சிரிக்கிறார்
வெகுகாலம் கழித்து
கன்னக்கதுப்புகளில் பூக்கும்
குறுகுறுப்புடன்
‘அவர் எப்பவும் அப்படித்தான்’
என்கிறேன்
அந்தியில்
சட்டென அவிழும்
பிச்சியின் மணமாய்
மயிர்க்கூச்செறிகிறது.
சாலை முன்னோக்கி நகர்கிறது.
வயது வந்தவர்களிடம்
நிறைவேற்றிட முடியா
விலைப் பட்டியலொத்த
விண்ணப்ப நீளங்கள்
சிறுவனிடம் தொடங்குவோம்
‘வேண்டும் வரம்
மூன்றாய்க் கூடக் கேள்’
‘அம்மா
அணைத்து முத்தமிட வருகையில்
குறுஞ்செய்தி பொரியும் நாராசம்
அவளுக்கு மட்டுமாவது
கேளாதிருக்கச் செய்.
போதும்’.
கவிதைகளும் குரலும் : காயத்ரி ராஜசேகர்
இந்தக் கவிதைகள் ஒலி வடிவத்தில் Spotify இல் கேட்க :