cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 15 கவிதைகள்

உங்கள் நாடி சோதிட ஓலைச்சுவடி எழுதப்படும் சப்தம்


ஒரு இறகு உதிர வேண்டியிருக்கிறது
ஒரு பனித் துளி உலர வேண்டியிருக்கிறது
ஒரு பனித் துளிக்கும் ஒரு வழலை நுரைக் குமிழிக்கும் இடையிலோ
ஒரு உடலில் இடம் மாறிய ஸ்டிக்கர் பொட்டுக்கும் மச்சத்திற்கும் இடையிலோ
காலம் அலைபாய வேண்டியிருக்கிறது
வெளியேற்றப்பட்ட மூச்சுக் காற்று போல இதை எழுதிய என்னை மறந்து விடுங்கள் என்ற பொறுப்பு துறப்பில் சர்வத்தை சாதரணத்தில்
அடக்கித் தொலைய வேண்டியிருக்கிறது
உங்கள் செல்லாத வார்த்தைகளையெல்லாம்
பொல்லாத அர்ச்சனைச் சொற்களாக மாற்றி
உங்கள் மீதே மந்திரித்து விட வேண்டியிருக்கிறது
நீங்கள் உதிர்க்கும் நற்சொற்களிலிருந்து
அர்த்தத்தின் ஆன்மாவைப் பிடுங்கிப் பிரித்தெடுத்து
வெற்றுடல்களாக்கிப் பேய் பிடிக்க வைக்க வேண்டியிருக்கிறது
நீங்கள் உங்களுக்கே வைத்துக் கொண்ட செய்வினைகளைத் தோண்டியெடுத்து
ஒரு பரிசுப் பெட்டியிலிட்டு
ஒரு பொய்மனைப் புகுவிழா நாளில்
திருப்பித் தர வேண்டியிருக்கிறது
உங்களை நோக்கி வரும் ஊழியின் ருத்ரத்தை
உங்கள் திருமார்பில் படும் என் திருக்கரம் கொண்டு
ஒரு நல்லூழின் பண்ணாக்கி இசைக்க வேண்டியிருக்கிறது

விடியலுக்கும் அஸ்தமனத்திற்கும் தேவையாகும்
என் சொற்கள் குறைவு
நடுவில் நீண்டு கிடக்கும் உங்களின்
இந்த நாளுக்குத் தான் இத்தனைப் பேச்சும்

அமைதியின் கருவூலத்தில் இருந்து
பேரமைதிக்கான ஒரு சொல் பிறக்கிறது
மீண்டும்
என்ன செய்ய இப்படியெல்லாம்
எனக்கு உளறக் கொடுத்து வைத்திருக்கிறது உங்களிடம்

மொழியின் கிலுகிலுப்பையை
மீண்டும் நான் அசைக்கிறேன்
ஒரு குழந்தை போல நீங்கள்
வேடிக்கை பார்கின்றீர்கள்
இப்படியே வேடிக்கை மட்டுமே நீங்கள்
எப்போதும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது


 கவிதை வாசித்த குரல் :  அன்பு மணிவேல்

இந்தக் கவிதைகள் ஒலி வடிவத்தில் Spotify  இல் கேட்க : 

About the author

நந்தாகுமாரன்

நந்தாகுமாரன்

பெங்களூருவிலுள்ள தனியார் நிறுவனமொன்றின் கணினித் துறையில் பணிபுரியும் கவிஞர் நந்தாகுமாரன் பிறந்த ஊர் கோவை. இலக்கியம், ஓவியம், ஒளிப்படம் போன்ற கலைத்துறையில் ஆர்வமுள்ள இவர், ‘மைனஸ் ஒன்’ ( உயிர்மை வெளியீடு - 2012), பாழ் வட்டம் ( காலச்சுவடு பதிப்பகம் -2021) உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளும், மின்னூல் பதிப்பாக ‘நான் அல்லது நான்’ சிறுகதைத் தொகுப்பு நூல், ‘ கலக லகரி’ ( கவிஞர் பெருந்தேவியின் எதிர்கவிதைகள் முன்வைத்து எழுதப்பட்ட ரசனை பதிவுகள்) உள்ளிட்ட நூல்கள் வெளியாகி உள்ளன. ஹைக்கூ வகை கவிதைகள் எழுதுவதில் ஆர்வமுடைய நந்தாகுமாரன் அயல் மொழிகளிலுள்ள கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து அளித்தது கவனத்திற்குரியது. பயணம் சார்ந்த புனைவுகளை எழுதும் ஆர்வமுடைய இவர் தற்போது ‘ரோம் செல்லும் சாலை’ எனும் புனைவு நூலை எழுதி வருகிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website