- உதிரும் வண்ணப்பூச்சு
சுண்ணாம்பு மட்டையைக் கொண்டு
சுவற்றிற்கு வண்ணம் தீட்டுகிறேன்
மெதுமெதுவாக வண்ணம் உரிந்து
எனை உள்ளோக்கி இழுத்துக்கொள்கிறது
சுவற்றிற்குள் புகைப்படமாக
சுற்றித்திரியும் அப்பாவின்
நெற்றியில் சுழல்கிறது
அம்மனின் குங்குமம்..
ஓங்காரச் சிரிப்பில்
நாற்காலியை சுழலவிட்டு
எனை வெளித்தள்ளுகிறது
மூக்கு கண்ணாடி..
மீண்டும் உள்நுழைய முயற்சிக்க
சுவர் தன்னை மெருகேற்றிக் கொள்கிறது
உதிர்கிறேன் நான்
வண்ணப்பூச்சாக..
- உதிர்தலும் உதிர்தல் நிமித்தமும்
உதிரும் சுவற்றின் வண்ணப்பூச்சாக
உதிரும் சருமம்
றெக்கை முளைத்து பறக்கிறது
வண்ணத்துப்பூச்சியாக..
வனாந்தரத்தில்
மலையுச்சியில் நடுநிற்கும்
மரத்தில் இலைகளாக ஒட்டிக்கொள்ளும்..
உயிர்ப்பிக்கிறேன்..
ஈரம் படிந்த நிலமாக
உதிரும் மழையில்..
உயிர்ப்பிக்கிறேன் பறவையாக
உதிரும் இறகில்..
உயிர்ப்பிக்கிறேன் கவரி மானாக
உதிரும் மயிரில்..
உயிர்ப்பிக்றேன் புல்வெளியாக
உதிரும் பனியில்..
உயிர்ப்பிக்கிறேன் மலராக
உதிரும் இதழில்..
உயிர்ப்பிக்கிறேன் பட்டாம்பூச்சியாக
உதிரும் உயிரில்..
உயிர்ப்பிக்கிறேன்..
மீண்டும் மனிதனாக..
கவிதைகளும் குரலும் : ஜெயபால் பழனியாண்டி
இந்தக் கவிதைகள் ஒலி வடிவத்தில் Spotify இல் கேட்க :