⇒ எர்ணாகுளத்தின் பெருந்தொற்று காலத்தில் வாய்த்த ஒரு பருவமழையில் எழுதியது.
தோழியுடன் மாலை நடைக்கு
சென்றபோது உடன்வந்த மழை,
உடைமை எண்ணம்கொண்ட
பதின்பருவ காதலனைபோல்
கோபித்துக்கொண்டு சிணுங்கி
அவளை விரட்டிவிட்டது.
சிறிது வேலையாய் கவனிக்காமல்
வீட்டிற்குள்ளேயே இருந்துவிட்டால்
ஜன்னல்வழி ஒரு சிற்றோடையை
அனுப்பிவிட்டு சிரிக்கிறது மழை.
புலம்பெயர்ந்த மக்களின் கிழிந்த பாதங்களின் ரத்தம்
இந்நாட்டின் மக்களாட்சியின்மேல் வடிந்தபோது
குற்றவுணர்ச்சியின் துயரத்தில்
ஒரு தாயைப் போல் அணைத்துக்கொண்டது
மழை
பெருந்தொற்றின் தனிமைக் காலத்தில்
புறாக்களின் தீவொன்றை
பரிசளித்தது மழை.
பின்னிரவில் உன் பேரிரைச்சலில்
தூக்கம் இழக்கிறேன் என்று சொன்னால்,
மழைப் பாடல்களை நினைவூட்டி
நெற்றி முத்தம் வைத்து செல்கிறது பிரியமாய்.
மழையை பற்றி பேசினால்
சொற்கள் ஒலியில் கரைந்துவிடக்கூடும்
என அஞ்சி
அவற்றை வல்லத்தில் எடுத்து சென்று
போஞ்சிக்கரா காயல் மீன்களுக்கு
வீசி வருகிறேன்.
எதிர்வரும் மழை நாட்களுக்கு
கோடையில் “உனக்கமீன்”
சேமிக்கும் முக்குவத்தியைப் போல
நான் மழையை பறவைகளின் தானியத்திலும்
ஓடும் இரயிலின் இசையிலும்
கத்தாளையின் மனத்திலும்
காயலின் உப்புக்காற்றிலும்
சேர்த்து வைக்கிறேன்.
மழையுடன் விளையாடி
மழையுடன் உரையாடி
மழையை பருகி
மழையை மோகித்து வாழ்பவள்
களம்சென்று போர் வென்று திரும்பும் தலைவனுக்கு காத்திருப்பதைப் போல
அடுத்த பருவமழைக்கு
காத்திருக்கிறாள் காதலுடன்.
Art Courtesy : artmajeur.com
கவிதைகளும் குரலும் : வித்யா.மு
இந்தக் கவிதைகள் ஒலி வடிவத்தில் Spotify இல் கேட்க :