யார் யாரோ வாழ்ந்துபோகும் வாடகை வீடு
காசுக்கு குடியிருக்கவங்களுக்கு ரோசம் கூடாதென்ற
கூன்கிழவியின் வசவுகளில் கூசாமல்
காலம் கடக்கின்றன சுயமரியாதை
ஆணி அடிக்கக்கூடாது
கக்கூஸ்ல அதிக நேரம் இருக்கக் கூடாது
கதவ அடிச்சு சாத்தக் கூடாது
உறவுக்காரங்க அடிக்கடி வரக்கூடாது
போன்ற சொற்களை மந்திரம் போல
மாற்றி மாற்றி உச்சரிக்கிறார்கள்
சுவர்களுக்கு பந்தக்காரர்கள்
இதென்ன எழவு பொழைப்போ என்று
அலுத்துக்கொள்ளத் தோன்றலாம்
எதற்கும் கிழவி வருகிறாளா
என எட்டிப்பார்த்துக்கொள்ளுதல் நலம்.
“இது அவளுக்கு ரொம்ப பிடிக்கும்
கொண்டுபோய் குடுங்க மாப்பிள்ளை”
என்ற அம்மாவின் சொற்கள்
ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தன
அதன் சூடோ சுவையோ பதமோ அறிய
அவள் நா ஒருபோதும் முற்பட்டதில்லை
அன்பின் ஆழத்தில் போய்
சுணங்கி கொள்ளும் சொற்களை
ஒரே விழுங்கில் உள்ளே தள்ளுகிறாள்
பசித்திருக்கும் கர்ப்பிணி பிள்ளை
தொண்டைக்குள் சிக்கிச் செல்லும்
அன்பின் நெடி விக்கலோடு கண்ணீரைத் தேக்குகிறது
“அம்மா நினைக்கிறாள் போல” என்றுக்கூறி
சிரித்துக் கொள்ளும் அவள் நினைவுக்குள் துள்ளுகிறது
குழந்தைமையின் வாசனை.
வழித்து தலைபின்னி பூ சூட்டி
தினமும் அம்மா முத்தமிட்டு
என்னைப் பள்ளிக்கு அனுப்புவாள்
சிறகை விரித்து நான் சாலையில் பறப்பதை
ரசித்துக்கொண்டே டாட்டா காட்டுவாள்
அப்போது தினமும் மழை தூறும்
பள்ளியிலிருந்து வந்தவுடன் அப்பா
ஈரமாகாத தலையைத் துவட்டி விடுவார்
அம்மா பஜ்ஜி சுட்டுத் தின்னக் கொடுப்பாள்
ஒற்றை பிள்ளையாய் செல்லமாக வளர்வதாய்
ஊரார் உறவினர் பேசிக்கொண்டார்கள்
இப்போதும் நான் ஒற்றைப்பிள்ளைதான்
தலையைப்பின்னி தினமும் பூச்சூடிக்கொள்கிறேன்
யாருக்காகவோ
பவுடர் அடித்து பொட்டு வைத்துக்கொள்கிறேன்
யாருக்காகவோ
அடைமழை எப்போதாவது பெய்து சலிக்கிறதுதான்
யாருக்காகவோ
இசையோடு வசையையும் கேட்டுக்கொண்டே
சேறு படிந்த சாலையில் மிதக்கிறேன்
சிறகுமுறிந்த காலத்தை வதைக்க
கையில் கிடைத்த சுடுகல் போல
இடைவந்த உறவுகள் குத்திட்டு நிற்கின்றன
யாருக்காகவோ வளரும் ஒற்றை செல்லப் பிள்ளைகளே
உங்கள் சிறகுகளில் கவனம்.
குரல் : சாய்வைஷ்ணவி
Listen On Spotify :