- பொதுவானது
உனக்கும் எனக்கும் பொதுவென்று ஏதுமில்லை
நம்மை இணைக்கும்
சிவப்பு நூல் எதுவுமில்லை
தூரத்தே தெரியும் நட்சத்திரங்களை
நீ உன் இடத்திலிருந்தும்
நான் என் இடத்திலிருந்தும்
பார்த்துக் கொள்வது தவிர…
என்ன ஒன்று….
என்றோ எப்படியோ பரிமாறிக்கொண்ட பரஸ்பர அன்பிலிருந்து
மீளப்பெற இயலாது தவிப்பதுதான்
பொதுவாகிப் போனது நமக்கு.
- நீ தந்தது
நீயான நான்
இரவற்ற நாள்
வாதை தராத குளிர்
காதலால் ஆன மழை
இனிப்பான கண்ணீர்
மெளனத்துக்குள் ஓசை
பசியில்லாப் பசி
பொய்க் கோபம்
மெய்க் காதல்
அன்பின் வாசனை
நெகிழ்வாய் ஒரு மனம்
உறவில் பெரும் சுகம்
வலியில்லாக் காயம்
வலிக்க வலிக்கப் பிரிவு
இத்தனையும் தந்த நீ
சாபமான வரம்.
- காதல் மூப்பு
மருதாணி வாசத்துடனான மென் பிஞ்சுக் கரந் தீண்டல்கள்
சீயக்காய் மணக்கும் ஈரக் கூந்தல்
நெஞ்சில் படிந்த கூடல் பொழுதுகள்
மேடிட்ட வயிற்றோடு கட்டிக் கொண்ட குறும்பு நாட்கள்
முந்தானை மணக்க வியர்வை துடைத்த இரவு நேரங்கள்
சுக துக்கங்களை மடியில் படுத்து ஆற்றிய மென்னினைவுகள்
எனத் தூக்கமின்றிப் புரளும் பொழுதுகளில்
எறும்பின் நீள் வரிசையெனக் கோடிழுக்கும் எண்ணங்களை
வயதுப் போர்வை கொண்டு மூடிக் கொள்கின்றது முதுமை.
- அன்பின் மணம்
ஒற்றைத் துளி
சிறு தூறல்
அருஞ் சாரல்
பெரும் புயல்
எதுவாகவேனும்
இருந்துவிட்டுப் போகட்டும்
என் தேவையெல்லாம்
உன் பேரன்பின் மழை வாசம்.
- கொய்தல்
மாமழையை உறிஞ்சி
வேர்வழி மேலேற்றி
ஒளியை நிறமாக்கி
கடுஞ் சூழல் பல தாங்கி
மணம் தேக்கி உள் வைத்து
வியப்பூட்டி விரியும்
சிறு பூவைச் சட்டென்று பறிக்கும் போது இனியேனும் உணருங்கள்
தாயின் மார்பில் பாலருந்தும் மழலையைப் பிடுங்குவதைத் தான்
மகிழ்வோடு செய்கிறீர்கள்.
கவிதைகளும் குரலும் : கி.சரஸ்வதி
இந்தக் கவிதைகள் ஒலி வடிவத்தில் Spotify இல் கேட்க :