cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 15 கவிதைகள்

ஊடும் பாவும்


கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்கள்

கம்பன் வீட்டில் கட்டுத்தறி இருந்ததா என்பது எனக்குத் தெரியாது
கட்டுத்தறி கவிபாடுமா என்பதுவும் எனக்குத் தெரியாது

ஆனால் தாத்தா வீட்டில்
தறி இருந்தது என்பதும்
அதை நெய்யும் போது
எழும் ஓசையே கவிதை என்பதுவும் எனக்குத் தெரியும்

நெசவு செய்யும் போது
கண்கள், கைகள், கால்கள்
என்ற மூன்று உறுப்புகளின் ஒத்திசைவு
அவசியம் என்பார் தாத்தா

காதுகளால் கேட்கப்படும்
நெசவு ஓசை
குழந்தைக்குத் தாலாட்டு
குமரிக்குப் புதுப்பாட்டு
என்பாள் பாட்டி

நிலம் தனக்கு ஆடையாக
கடலை உடுத்திக் கொள்ளும் இடம் மட்டுமல்ல நெய்தல்
மனித மானம் காக்க ஆடை உண்டாக்கும் தொழிலும் நெய்தல்

நெய்யும் போது முழுவதுமாக
உட்காரவும் முடியாது
முழுவதுமாக
நிற்கவும் முடியாது
ஒருவித சாய்மானத்தில்
சுவரோடு ஒற்றிக் கொண்டு
காலத்தின் தேய்மானத்தைக் கணக்கிட்ட தாத்தா
நெசவு இன்றி
கசவு இல்லை என்பார்

இன்று கார்த்திகைத் திதி
முன்பெல்லாம் இந்நாளில்
தறிக்குழியைத் சாணமிட்டு மெழுகுவார்கள்
இப்போது விசைத்தறியின் வரவால் தறிக்குழிகள் எல்லாம்
மூடப்பட்டு விட்டன

ஒரு வீடு கட்ட
வானம் தோண்டுவதைப்
போலத் தான்
தறி போட தறிக்குழியையும்
தாத்தா தோண்டியிருப்பார்
தொழில் நசிந்த பின்
மண் போட்டு தறிக்குழியை
மூடிய போது
அவருக்கு ஏற்பட்ட துக்கம்
கட்டி முடிக்கப்பட்ட ஒரு புதுவீட்டை
இடிக்கும் போது
ஏற்படும் துக்கத்திற்கு நிகரானதே

தறிக்குழியை மூடி
மேலே பதிக்கப்பட்ட
அந்தக் கொல்லம் செங்கற்களின் பரப்பளவில் தான்
இன்று வரைக்கும்
படுத்து உறங்குகிறார் தாத்தா.


 

About the author

மு.ஆறுமுகவிக்னேஷ்

மு.ஆறுமுகவிக்னேஷ்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website