- அப்பெண்
சிறகுகளால் நெய்த
அவளுடலெங்கும்
பூ மணம்
சருகுகளின்
சலசலப்பொலியில்
ஊர்ந்தோடும்
வண்டுகளின்
நளினத்தையொத்த
அவளசைவுகளில்
வசீகரம்
மிதக்குமாயிரம்
நீர்துளிக்குளிர்
வனதேகத்தில்
பரவியிருக்கும்
ஒரு மழைத்துளி
புவி அடியை தொட்டு
நதியென
உருவெடுக்கும்
பேராசையை
தூண்டுகின்ற
புள்ளியின்
தொடக்கம்
அவள் பார்வை
கொத்து கொத்தாக
சல்லி வேர்கள்
மண்ணிடம் பிரிந்து
விண்ணிலே
தெரிவதென்ன
அவளின்
மின் நவீன ஒவியமா !
அரவணைப்பிற்காய்
ஓடிவரும்
விலங்களுக்கு
இவளின் கதகதப்பு
பிடித்திருக்கிறதோ …
நீ வாழும்
பச்சைக்குறையாத
இலைகளாலான
மலைவடிவ வீட்டில்
காற்றுக்கும்
எனக்கும்
அனுமதி தருவது
சுயநலமா ?
இளம் கனிகளின்
சுவை தேன் அங்கம்
அதிகாரத்தின்
சிமிழோ !
அழகுணர்ச்சியின்
கலையோ !
முதல் முறை
முற்பட்டு முடியாமலும்
கடைசியில்
கவனிக்காமலும்
நீங்கியதற்கு
காதலை
காலதாமதப்படுத்தியதே
காரணம்.
- வேண்டுகோள்
உன்
அப்பள வார்த்தைகளை
வீசி சென்றால்
நொறுங்கவே
செய்யும்
உன் தீ கருத்தை
நீரில் அமிழ்த்தினால்
அணையவே செய்யும்
உன் பனி முகத்தை
ஆதவனிடம்
அர்ப்பணித்தால்
மறையவே செய்யும்
உன் வெயிலை
ஒளித்து வைத்தால்
இருள் வரத்தான் செய்யும்
உன் பகையை
கூர்தீட்டி
ஒடசெய்தால்
முட்டவே செய்யும்
உன் நேரத்தை
விரயமாக்கினால்
காலங்கள் கழிய
செய்யும்
உன்
எதிரான சிந்தனை
லாவகத்தில்
ஓடிகின்ற கிளைகளை
எப்படி ஒட்டி
உயிரூட்ட முடியும்
ஒரு நிமிடம்
நின்று
என் சொல்
கேள் !
- அவள் வருகை
ஒர் அளவில்
தொடங்கி
பெரிதாய்
முற்படப்போகும்
ஓவிய முன்னோட்டம்
மனக்கண் முன் விரிகிறது
நாட்பட்ட புண்ணிற்கு
மூலிகை மருந்து
கீழ்திசை வைகறை
அனுப்பி வைக்கிறது
பெரும் புயலுக்கு முன்
சூழும் அமைதி
ஆகாயத்தின் சூழ்நிலை
மாரியை வழங்குவதற்கான
நம்பிக்கை
உலர் திராட்சைகள்
உயிர்பெற்று
அகில சுவை கூட்டி
சமுத்திர கனவில்
மிதக்க விடும் தொடரலை
சோலை
வண்டுகளின்
விரகங்கள்
தீர்க்கப்பட்டபின்
ஒய்வறியாது
அவயத்திற்குள்ளாகிற
பொழுதுகள்
நாட்பட்ட
வலை அறுபட
முற்றுகையிட்ட
கூட்டத்தைத் தாண்டி
ஏற்றுக்கொண்ட
உன் பூ மாலை
ஒரு சிமிட்டலில்
வேரறுந்த
யாக்கையின்
கடைசி சொட்டு
உப்புநீர்
கனவற்ற
மலை குரங்கின்
களி நடனத்தில்
முகம் சுழிக்க
வைத்த செயல்
கடைசி பக்க
கையெழுத்தில்
கண்டுபிடித்த
ஒற்றெழுத்தின்
குற்றம்
மிகுதியாய்
எழுதிவிட்ட
அயர்ச்சியில்
நற்சொற்களை
தவறவிடுவது
புலால் மறுத்த
குருவியின் ஆசை
அச்சமூட்டும்
வெஞ்சினம்
திறக்கப்படாத
பெட்டிக்குள்
எவ்வளவோ
விருப்பங்கள்
அவையனைத்தும்
தருக நீ வருக
வருக !
கவிதைகளும் குரலும் : நலங்கிள்ளி
இந்தக் கவிதைகள் ஒலி வடிவத்தில் Spotify இல் கேட்க :
மிகவும் அருமையான கவிதை.