cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 15 கவிதைகள்

நீலநிற சீருடை அணிந்தவர்

கண்ணன்
Written by கண்ணன்

ஆளு படை அம்பு
தண்ணி பாய்ச்ச
நாற்றுநட களையெடுக்க
அறுவடைக்கென
கிழங்கு பிடுங்கும் நாளில்
பெருநகர நெரிசலாய்
அடுத்த காடுவரை
நீண்டிருக்கும் வண்டிகள்

கலைந்துபோன மேகமாக
அதிகாலை கனவாக
அத்தனையையும் அழித்தது
மாயக்கரமொன்று

பித்தக்கற்களால் அடிவயிறு பிடித்தபடி
அமர்ந்திருந்தவர்
வண்டி சத்தத்தில்
திடுக்கிட்டு எழுந்து
கதவு மூடி நின்றபோது
கைகளில் விழுந்தது பத்து ரூபாய்த்தாள்

ஒரு வினாடி தயங்கிப்பின்
கும்பிட்டு வாங்கிக் கொண்டன
படியளந்த கரங்கள்

நடுங்கியபடி இருக்கும்
மரத்துப்போன கால்களுடன்
நீரில் நனைத்த கைக்குட்டையை
தலையில் துடைத்தபடி
வெயிலை வெறித்தபடியிருந்தவர்
குரல் வந்த திசைநோக்கி
ஓடினார் பள்ளி மாணவராக

வாழ்ந்து கெட்டவர்கள்
நடைப் பிணங்கள்
சாவென்பது தினசரிக் காலண்டரில்
ஒரு தாள் கிழிப்பது போல


கவிதையும் குரலும் : கண்ணன்

இந்தக் கவிதையை ஒலி வடிவத்தில் Spotify  இல் கேட்க : 

About the author

கண்ணன்

கண்ணன்

சேலம்-தாரமங்கலத்தை சார்ந்த கண்ணன் தற்போது பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இவரின் முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு வெளிவந்தாக தெரிவிக்கிறார். சமீப காலங்களில் நுட்பம்- கவிதை இணைய இதழிலும், செந்தூரம், புரவி, தளம், நடுகல் போன்ற இதழ்களிலும் இவர் எழுதும் கவிதைகள் வெளியாகி இருக்கின்றன.
'கோதமலை குறிப்புகள் ' எனும் தலைப்பில் இவரின் முதல் கவிதைத் தொகுப்பும் வெளியாகி இருக்கிறது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website