cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 15 கவிதைகள்

சந்திரா மனோகரன்னின் இரண்டு கவிதைகள்


  • தெட்பம்

தொலையில் கர்ச்சிக்கும் மேகங்களைப் போன்ற
என் ஏக்கங்கள் அவனுக்குத் தெரியும் .
திடீர்ப் பொழிவினால் அப்பாவிப் பூக்களுக்குப் பேரானந்தம் .
பழம்பெரும் துமிதம் அது !

என் ஒளியை யார் பூட்டி வைத்தது ?
என் இளமையைக் கண்டு கொண்டேன்
வேரூன்றும் என் வலிமை !

என்னைப் புறக்கணித்த நிழல் மரங்களை
வெட்டிச் சாய்க்கிறேன் , ஒரு கோபுரத்தைப்போல .
என் அருகிலிருந்த அள்ளிருள் மெல்லக்கலைகிறது
பெரும்புலர்காலைக்கு இறுக்கமான மௌனம் உணவாகிறது
என்னைச் சுற்றியிருந்த விரக்தி கட்டவிழ்க்கப்படுகிறது
அவன் மென்முறுவலின் பிரமிப்பில்
வெற்றிடம் சொர்க்க உலகமாக உருவாக்கப்படுகிறது

நிலவறைக்குள் என்னை அழுத்திச் சிறைப்படுத்திய
கனவுகளே , உங்களுக்குப் புதைகுழி தயார் !
அச்சுறுத்தும் துடிப்பே இனி உன் சுமை
என் மனதை உடைத்த அழுகை
என்னமாய் காலாவதியாய்ப் போயிற்று !

நதிபோல் நிரம்பி வழிகிறது நானிலம்
தெண்ணீரில் மிதக்கும் தெப்பம் போன்றது எங்கள் வாழ்வு .
இருண்ட மர்மம் அழுகிய பழம் போல் அடையாளமிழக்கிறது
வசீகரிக்கும் காலம் துள்ளி குதிக்கிறது
மலைகளுக்கு அப்பால் ஒலிக்கும்
எங்கள் குரல்களில் ஒரு தெட்பம் !


  • நடனக் கலைஞன்

இலையுதிர்காலம் நமக்கு அன்னியோன்னியம்
திட்டுத் திட்டாய் வெண்மை , மரங்களுக்கிடையில்
உறைபனியின் பிரசன்னம்
எங்கள் பாதங்களுக்கடியில் துவளும் இலைகள்

நாம் காத்திருப்போம் இளவேனில் வரை
நம் துயரம் நொருங்கிப் போகும்
இந்த மஞ்சள் இலைக் கொத்துகளும் ,பழுப்பு நிறப் புல்லும்
துளிர்த்துக் கொழிக்கும் சித்திரை வைகாசி காலத்தில்

தெளிவற்ற நீண்ட கும்பிருட்டுக்குள் , ஏனோ
வசந்தம் இன்னும் உறைந்தே கிடக்கிறது
மங்கலான கனவுகளுக்கு இத்தனை இறக்கைகளா ?

பயணியர் விடுதியில் காத்திருப்போர் பட்டியலில் நாம் !
இந்த இறுக்கமான நாட்களையும்
கடவுள்தான் படைத்திருக்கிறார், ஒரு சிலருக்காக .

நீண்ட சாலையைப் போலவே , நமக்கான இரவும்
தங்குமிடத்தில் நாம் கைவிடப்பட்ட நிலையில்
பலகணி வழியே தெரியும் ….எரி நட்சத்திரங்கள்
அவைகளை யார் நாடு கடத்தியது ?
வளமான வானத்தில் அழியாத நெருப்புப் பொட்டு !

வெடவெடக்கும் பனியில் … புல்லின் கருகலில்
காற்றின் ஊடறுக்கும் நடனம் !
நம் ஆன்மாக்களுக்குள்ளும் ஊடுருவத் துடிக்கிறது
என்றும் இளமையான நடனக்கலைஞன் ஆயிற்றே !


 

About the author

சந்திரா மனோகரன்

சந்திரா மனோகரன்

தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த சந்திரா மனோகரன் வேளாண் பொறியியல் துறையில் கண்காணிப்பாளராக பணி புரிந்தவர். இதுவரை கவிதை , கதை , புதினம், கட்டுரை, மொழிபெயர்ப்பு என 38 நூல்களை எழுதி உள்ளார். அண்மையில் 'அசையும் இருள் ' கவிதை நூலுக்கு தமிழ்நாடு அரசின் ' நற்றமிழ் பாவலர் விருது ' , தவிர , வெவ்வேறு இலக்கியப் போட்டிகளில் பரிசுகள், பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website