- போய்விடு
நான் இரண்டாகப் பிரிந்து என்னையே திறக்கும் எத்தனிப்பில்
கொஞ்சமாக அனுமதிக்கிறேன் ஒரு சொல் என
இந்த மதிய நேரத்து வெயிலை
ஜன்னலோர மேஜைமீது
கையூன்றி தாங்கிய என் கன்னத்தில் படரும் அர்த்தத்தில்
இன்னும் ஏனோ
ஈரமாகவே எஞ்சுகிறாய்
மீண்டும் மீண்டும் எழுதிப் பார்க்க விட்டுவைக்கவில்லை
எந்தக் காரணமும்
அந்த கடைசி ஞாபகத்தை
அதனால் என்ன
அந்தி எரிந்து சாம்பலாகி
இரவின் கடைசி சொட்டு காத்திருக்கிறது
இன்னும் ஒருமுறை தொட்டுக்கொள்ள
கனவுகள் உப்பி வெடிக்காமல் அலையாடும் அசைவில்
குளிரூட்டும் சில்லிப்பை
இமை விளிம்பு மீறி துளிர்த்து நழுவி
இதழ் வளைவில் ஆவியாகும் ஓர் அவஸ்தை
நீ
அறியாய்
என்னையே இரண்டாகத் திறக்கும் ஓர் எத்தனிப்பை
நீ அறியாய்
- அதனை தெரிந்திருக்கவில்லை என்றபோதும்
மதில்மேல் எதுவொன்றும் காத்திருக்கவில்லை
அதில் வார்த்தை வார்த்தையாகப் புதைக்கப்பட்டிருக்கும்
கூர்மையில்
முன்னர் அசைவுகள் இருந்திருக்கலாம்
மௌனம் இடறிவிடாமல்
காலாற நடந்து போய்வர ஒரே ஒரு பொழுதை
யாசகமாய் பிச்சையிட
ஏந்துகிற பாத்திரம் இந்தப் பிறவிக்கானது
வாக்குறுதிகளை மீறி கசிந்துவிடும் கையெழுத்துகள்
பச்சை நிறத்தில் பிசுபிசுத்திருக்கலாம்
எல்லாவற்றுக்கும் அசைந்துகொடுக்கும்
உச்சந்தலைகளில்
படியிறங்கி
வாசல் செருப்புகள் தம்மோடு கொண்டுபோனது
பாதங்களை மட்டுமல்ல
திரும்பிவர வழியறியா தருணங்களையும் தான்
- ஊடுருவி வெளியேறுகிறாய்
என்னைத் தூண்டும்படியான பகல்
நெடுஞ்சாலையில் தகித்துக்கொண்டிருக்கிறது
பயணம் ஆகிட
உன்னை நோக்கி வழியனுப்பி வைக்க என்னை நான்
மேலும் உந்தித் தள்ளுகிறேன்
இதயத்தின் நாளங்களில் பாய்ந்தோடுகிறது
துள்ளத் துடிக்க அனல் கொப்பளிக்கும் ஓர் உயிர் நதி
கசடுகளாக கரைந்தோடும் அர்த்த சருகுகளை
சதா உதிர்த்தபடி நிற்கிறது
மனக் கரையின் கெட்டித்த அமைதியில் வேர் ஊன்றிவிட்ட
ஓர் அபத்தம்
தூரத்து கானல் அலையில் வதங்கிக் கொண்டிருக்கிறேன்
நெருங்கிட நெருங்கிட தொலைந்தும் போவேன்
மூச்சு முட்டுகிறது
திசைகளின்மீது அழுத்தம் கொடுத்து பெற்றுக்கொண்ட
சத்தியங்கள் அத்தனையும் பத்திரமாய் இருக்கின்றன
அதற்கும் முன்னே
வந்து சேர்ந்திருக்க வேண்டியது
வெறும் தகவல் அல்ல
கனவுதோறும்
அலைமோதும் ஒரு மூச்சுக்காற்று
- ஒவ்வொன்றிலிருந்தும்..
ப்ரியத்தின் விளையாட்டென
மடித்து வைக்கப்பட்டிருந்த ரகசியத்தை
பிரித்தபோது
அதில் மிச்சம் விட்டுவைக்க முடியாதபடி
கை நிறைய சந்தர்ப்பங்கள்
இட்டு நிரப்பிக்கொள்ள தோதாக
ஒரு வெட்டவெளி
அதற்கும் கீழே
இரண்டு உதடுகளின் தவிப்பு மட்டும்
ஒற்றி எடுக்கப்பட்டிருக்கிறது
பிரிவின் வளைவாக
கவிதை வாசித்த குரல் : அன்பு மணிவேல்
இந்தக் கவிதைகள் ஒலி வடிவத்தில் Spotify இல் கேட்க :