- ஊடிக் கூடுமோர் சிறுதெய்வம்
ஒவ்வொரு
குட்டி ஊரிலும்
முதலில் பிகு பண்ணிப் பின் கிழிசலைத்
தைத்துத் தரும்
ஊர்த் தையல்காரனொருவன்
இருக்கிறான்.
கொடை தான் வேண்டுமென்று
முன் கேட்டு
பின் பனம்பழம் மேல்
ஏற்றும் சூடம் போதுமென
இரங்குமோர் ஊர்ச் சிறுதெய்வம் போல.
- உயிரின் மூலக்கூறு
புரதம் ஒருவனை எவ்வளவு உயரம் உள்ளவனாக ஆக்குகிறது.
புரதம் ஒருவனை எவ்வளவு குள்ளமாவனாக ஆக்குகிறது.
புரதம் ஒருவனை எவ்வளவு வலு உள்ளவனாக ஆக்குகிறது.
புரதம் ஒருவனை எவ்வளவு வலு இல்லாதவனாக ஆக்குகிறது.
புரதம் ஒருவனை எவ்வளவு பணக்காரனாக காட்டுகிறது.
புரதம் ஒருவனை எவ்வளவு ஏழையாகக் காட்டுகிறது.
ஆக, இந்த உலகம் புரதத்தாலே
ஆகியிருக்கிறது
இல்லையா.
கர்த்தருக்கு, காதலுக்கு, ஞானத்துக்கு புரதமென்றா பெயர்.
வாழ்க்கையே, நீ இக்கணம் முதல்
புரதமென்று அழைக்கப்படுவாய்.
- காமத்தின் ஏழ் வண்ணம்
ஏதோ ஒரு ஊடலில்
சனியின் முங்குநீச்சல்
இரவுகளில் டிபி மாற்றும்
அழகுக் காதலன்
ஞாயிறு காலைகளில்
மாற்றம் எந்நாட்டுக் காதலிக்கானது
எனக் குழம்புகிறான்.
ஏழு வண்ணங்களின்
தீற்றமவன் கைகளில்
கோபமா பேபி
என்கிறாள் சீனத்தி
தான் வேறு படம்
மாற்றுகிறாள் மஞ்சணத்தி
கதைக்கும் நேரம்
தப்பியதே போதுமாக
24 மணிநேர
ஆன்லைன்வாசியை
நோக்கி நகர்கிறது
ஒரு பார்வை.
உருகிக் கசிகிறாள்
பனியுருகா நாடத்தி
சந்தோஷத்தில்
தவிக்குமவன்
பொன்னுடல்
சமையலறை அழைப்பு
ஒன்றிற்கு
ஒத்துழைக்க மறுத்து
தொய்ந்து சரிகிறது.
அருமை