விடைபெறும் கணத்தில் யாருமறியாது
உன் கண்களைப் பார்க்கிறேன்
உடையும் அபாயத்தில் இருக்கிறது
உணர்ச்சிகளின் நதியொன்று
தடுமாற்றத்தை மறைக்கவென
வாகனத்தை விரைவாக்கச் சொல்கிறாய்
கைப்பையைச் சரி பார்க்கிறாய்
அருகிலிருப்போரைக் கடிந்து கொள்கிறாய்
எனக்கு முன்பே இறங்கி
அவசரமாய் விடைகொடுக்கிறாய் .
அன்பே எனக்கும் தெரியும்
அன்பின் பரிசுகள்
ஏவல் பொருட்கள் என,
இரவை கரைசேர்த்த பின்
திரும்பிப் போவதைத்தவிர
நிலவிற்கு வேறு தேர்வுகள் இல்லையென,
நம் எதிர்கால ரயில்
எப்போதோ புறப்பட்டு விட்டதென,
எவ்வளவு மன்றாடினாலும் நிகழ்காலத்திற்குத்
திரும்பத்தான் வேண்டும் இல்லையா?
வீழ்தலுக்கு பின்னென
துளிர்க்கிறதொரு வசந்த காலம்
அந்தி சூழும் மேய்ச்சல் நிலத்தில்
விக்கித்து நிற்க வேண்டியதில்லை
உறங்காத இரவுகளில்
நட்சத்திரம் எண்ண வேண்டியதில்லை
அரூபத்தின் கரங்கள் தேடி
தொடுவானம் துரத்தத் தேவையில்லை
காயங்களின் கால்களுக்கெனவே
களிம்பில் பாதை நெய்த காலம்
என்னை ஒரு நட்சத்திரமாகக் காட்டுகிறது.
உண்மையில் என் பிரார்த்தனையெல்லாம்
நின்று ஒளிர்வதல்ல
உன்கவனம் ஈர்த்தபடி
எரிந்து வீழ்வதுதான்…
கவிதைகள் வாசித்தவர் : தீபிகா நடராஜன்
Listen on Spotify :