cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 16 கவிதைகள்

குழிமுயல்கள் திரியும் செம்மண்காடு


1.

இரவில் மேய்கின்ற முயல்களின்
நடுவே
இரவை மேய்கின்ற தலைவி முயலொன்றும்
வசித்தது.
அது இரவை ஓர் அப்பம் போல
பிய்த்துத் தின்றது.
நிலவும் நட்சத்திரங்களும் நடுங்கியபடி
காலம் நகர்த்துகின்றன.
ஓர் அதிகாலையில் மரணித்துக்கிடந்த
அதனைச் சுற்றிலும் உதிர்ந்திருந்தன
மிச்ச இரவுகளும்,
மலர்ந்தது அறியாத
வெப்ப மலர் ஒன்றும்.

2.

மத்தி மீன்களை கூழாங்கற்கள்
சூழ்ந்திருக்கின்றன
அதன் செதில்களில் படர்ந்து
தன்னுடலை மலர்த்துகிறது வெயில்.
கூழாங்கற்களின் நிசப்த பாடலுக்கு
நடனமிட்டுச் சிரிக்கின்றன
மீன்கள்.
தன்னுடலின் வெம்மை தணிந்ததும்
மீன்களுடன் நடனமிடுகிற வெயில்
முன்காலத்தில் தானொரு குழிமுயல் எனவும்
இப்போது வெயிலாக இருக்கிறேன்
என்கிறது சிவப்பேறிய கண்களுடன்.
தன்
சரீரத்தில் நுழைகின்ற கத்தியின்
கூர்மையை சபித்தபடி மரித்தன மத்திகள்.
கூழாங்கற்களிலொன்று வெயிலாகவும்
மற்றொன்று மத்தியாகவும் உருமாறிய கணத்தில்
கத்தியுருவிலிருந்து
வெளிக்குதித்தது வெண்கொக்கின் அலகொன்று.
யாருமற்ற கடலின் நடுவே தனித்தலைகிறது
நிசப்த சிறுமியின் உருவிலிருக்கும்
முயல் பாடல்.

3.

வேட்டை நாயிடமிருந்து தப்பிக்கப்
போராடுகிறது குழிமுயல்.
நீண்ட செம்மண் பரப்பில் அங்குமிங்கும்
ஓடும் அதன் ரோமங்களிடையே நுழைந்த
வெயில்,
வேட்டை நாயின் பற்களைக் கண்டு அலறியபடி
தன்னுடலை ஒளித்துக்கொண்டு
அல்லாடுகிறது.
புழுதி பறக்கும் பூமியின் உடலெங்கும்
எட்டுக்கால்களின் தடங்கள்.
சோர்ந்த வேட்டை நாய் தன்
ஓட்டத்தை நிறுத்தி மூச்சுவாங்கும் தருணம்
தப்பித்தது குழிமுயல்.
ரோமங்களுக்குள்ளிருந்து வெளிக்குதித்த வெயில்
தன்னிடமிருந்த கண்ணியை
யாரும் அறியாப் பொழுதொன்றில் வேலியோரம்
பதித்து மறைந்தது.
காலம் காலமாய் இறுக்கும் கண்ணிகளில்
செத்து மடிகின்றன குழிமுயல்கள் உருவிலிருக்கும்
குழந்தைகள்.


கவிதைகள் வாசித்த குரல் : உலகநாதன்

Listen on Spotify : 

About the author

ராஜேஷ் வைரபாண்டியன்

ராஜேஷ் வைரபாண்டியன்

ராஜேஷ் வைரபாண்டியன் தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் சாயர்புரம் எனும் ஊரின் அருகேயிருக்கும் நடுவைக்குறிச்சியை சேர்ந்தவர். ‘நிலாரசிகன்’ என்கிற புனைப்பெயரில் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை 2018 வரை எழுதி வந்தார். அதன் பின்னர் தன் சொந்தப் பெயரில் எழுதி வருகிறார். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி இருக்கின்றன. இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு சிறார் நாவல், ஒரு நாவல் எழுதியிருக்கிறார்.
இவரது வேனிற் காலத்தின் கற்பனைச் சிறுமி கவிதைத் தொகுப்பு சிறந்த கவிதைத் தொகுப்புக்கான சுஜாதா விருதும், பிரமிள் விருதும் பெற்றது. ஈர்ப்பு விதியை(Law of Attraction) மையப்படுத்தி ஐந்து நூல்கள் எழுதி இருக்கிறார். 361 டிகிரி, உதிரிகள் என இரு சிற்றிதழ்களின் ஆசிரியராகவும் உள்ளார்.

வலைத்தளம்: www.rajeshvairapandian.com

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website