மலர்க்கேணியில்
எட்டிப் பார்க்கும் தேனீ
மலரைத் தேன் நீ என்றது
மது பிலிற்றும்
மலருக்கு
தேன்முகம்
ஒவ்வொரு மலரும்
நனிச்சிறு தேன்கூடு
நரை கூடும் காலம் வரை
நிலைத்திருக்கும் நேசம்
நறை தான்
காதலியின் மனதில்
காதலனைப் போல
மலரின் மடல்களுள் தேனீயும்
மனச்சிறைக் கைதி
பூவுக்குப் பூசை செய்யும்
தேனீக்களின் ரீங்காரம்
மணியோசை
மலர் என்ற ஆலயத்திற்கு
சூலகம்
கர்ப்பக்கிரகம்
மகரந்தங்களை
இன்னொரு மலரின்
சூலகத்திற்கு கடத்தும் வரை
அவற்றைச் சிறகுகளில்
சுமக்கும் வண்டுகளும்
வாடகைத் தாய்கள்
நாரும் நாறும்
பூவோடு சேர்ந்திருந்தால்
தேர்ந்தெடுத்து தேன் குடிக்கும்
தேனீக்களின் வாழ்க்கை தான்
கொங்குதேர் வாழ்க்கை
பாரதி
பூக்களின் நெஞ்சங்களில்
கனல் மணக்கிறது என்கிறான்
ஏன் அப்படி என்று மட்டும்
சொல்லவேயில்லை
உன் வளையலை வாங்கி
ஏதோ ஒரு பரீட்சையில்
வட்டம் போட்ட போது
பூவுக்கு
அல்லி வட்டத்தையும்
புல்லி வட்டத்தையும்
வரைய வளையல்
யார் கொடுத்திருப்பார்கள் என்று
எனக்குள் ஒரு கேள்வி.