- ஏன்?
ஏன்?
என்ற ஒற்றைக்கேள்விக்கு
குற்றப்பத்திரிகை வாசிக்க தந்தாய்
திருப்பவியலாத கனம்
கொண்ட பக்கங்களை
மிகப் பிரயத்தனப்பட்டு புரட்டுகிறேன்..
என் மீது எனக்கே வன்மம் தோன்ற
போதுமான காரணங்கள் நிறைந்திருந்தன…
வீழத்துவங்கிய ஒரு கணத்தில்
பலங்கொண்ட மட்டும் உயரத் தூக்கி
வெகுதொலைவிற்கு வீசியெறிந்தேன்
நீ பரிசளித்த பாவ புத்தகத்தை..
காற்றில் மிதந்த குற்றங்கள் யாவும்
ஒவ்வொன்றாய் என்னில் இருந்து
பிரிந்து பறக்க துவங்கியது…
பாரமற்ற அந்த நொடியினில்
தீர்மானித்து தெளிந்தேன்
இனி ஏன் என்று யாரையும் கேட்பதில்லை என!
- நான் மிருகம்
வரைமுறைகளற்ற ஆசைகளை
மனதுக்குள் மறைத்து
உனக்கான எல்லைகளை
நீயே வகுத்துக்கொள்கிறாய்..
மனவக்கிரங்கள் குறித்து
வகுப்பெடுக்கும் உனக்கு தெரியாதா?
மனித இயல்பென்பது
மாறிக்கொண்டே இருக்குமென
மனிதனுக்கு மனிதன்
சூழ்நிலைக்கேற்ப
இச்சைகளுக்கேற்ப
வசதிகளுக்கேற்ப…!
நீ இட்ட கோட்டில்
நட்பென்றும்,
காமமென்றும்,
காதலென்றும் பிதற்றித் திரிகிறேன்.
உடலுக்கும் மனதுக்குமான பசியை
என்ன பெயரிட்டு அழைப்பேன் பிரியசகி..?
பசியை மறக்கவும்
பழகிக்கொள்ளவும்
மனிதர்களுக்கு மட்டுமே
கற்று தரப்பட்டிருக்கிறது.
உன் வாழ்வில் நான் ஒரு
மிருகமாய் இருந்துவிட்டு போகிறேன்..
உன் போதனைகள் வேண்டாம்
நீ மட்டும் போதும்!
- கேள்வியின் நாயகி
விளையாட்டாய் தான் கேட்டாய்
“சண்டையிட்ட நாளினை
எங்ஙனம் கடப்பாயென?!”
ஏன் அப்படிக் கேட்கிறாய்?!
அப்படி சூழ்நிலை வராதென்றேன்..
கூறும்போதே ….
மனதுக்குள் நெளிந்தோடியது
நீ பேச மறந்த பொழுதுகளும்
உன் வார்த்தைகளுக்காய்
காத்திருந்த நிமிடங்களும்..
நாள் என்பது வெகுநீளம் இல்லையா?
“என்னுடன் நீ பேசாமல் இருப்பாயா ?”
என்னும் கேள்விக்கு
கண்சிமிட்டி , முகம் சுழித்து
“தெரியாதே”! என சுலபமாய் கடக்கிறாய்..
நீ சண்டையிடும் நாள்
வெகுதொலைவிற்கு போகட்டும்
என வேண்டியவாறே நானும்
உதிரிப் புன்னகை ஒன்றை
உதிர்க்கிறேன் உனை நோக்கி!
கவிதைகள் வாசித்த குரல்:
வார்த்தை பிரயோகம் அருமை. கவிதைகள் மனதை தொட்டுச் சென்றது . ஏன் என்பதில் தொடங்கி கேள்வியின் நாயகியாகவே முடிந்தது. வாழ்த்துகள்..!!
Thanks Selvaa Vairavan❤