உடைந்து சிதறிக்கிடந்த
கண்ணாடியை
நானும் அவளும்
தனித் தனியாகப் பொறுக்கி
ஒன்றாக்கி
மீண்டும் ஒட்டி வைத்துப் பார்க்கிறோம்
தனித் தனியாகத் தான் தெரிகிறது
உடைந்த கண்ணாடியில்
இருவரின் முகமும் உள்ளமும்.
இருகரையையும்
மூழ்கடித்துச் சென்ற
அந்த ஆற்றுப்பாலத்தைக்
கடந்து செல்லும் பொழுதெல்லாம்
என் மனம் ஒரு புது ஆறாக
பொங்கியெழ துடிக்கிறது
மணல் ஏற்றிக்கொண்டிருக்கிற லாரிகளை எல்லாம்
ஆற்றோடு ஆறாக
அடித்துச் சென்றுவிடலாமென்று.