- ஒரு வரி
ஒரே ஒரு வரிக்காகவே
அந்தப் பாடல்
நம் அபிமான பாடலாவதுண்டு
பல்லவியும் சரணமும்
இணையும்
புணரொலி இசைப்பொழுதில்
நாம் அந்தப் பாட்டின் நிரவலிசையிலிருந்து
விடுபட்டு
அந்த ஒரே ஒரு வரியை மட்டும்
பாடிவிட்டு மீண்டும் பாட்டுக்கு வருவோம்.
இசையின் பல அடுக்கின்
இடுக்கிலிருந்த அவ்வரி
பாட்டிலிருந்து தாவியபடி
நம் மேல்
மீண்டும் மீண்டும் ஏறிக்கொள்ளும்.
அந்த வரியை நெருங்க நெருங்க
முதுகுத்தண்டு எக்கத் தயாராகிவிடும்
அந்த வரிக்கான இடத்தில்
அந்தப் பாட்டின் ஜீவனை
முத்தமிட்டு
அந்தப் பாடகரோடு சேர்ந்து
நமக்கான வரியைப்பாடி
நாம் முடித்துக் கொள்ள
பாடகர் மற்ற வரிகளைப் பழையபடியே
தனியாகவே தொடர்ந்து கொண்டு போகிறார்
அவ்வரி முடிந்த அக்கணமே..
அந்தப் பாடல்
ஒரு பறவையைப் போல
நம்மிடமிருந்து
பறந்து போகிறது
நமக்கான வரி மட்டுமே
ஒரு இறகைப் போல
நம் கண் முன்னே அசைந்து கொண்டிருக்கிறது.
- பொருத்தம்
திருநிறை செல்வியாகிய
ஒரு இளம் பெண்ணின்
இறுதி அஞ்சலி சுவரொட்டி
அவ்வூரெங்கும்
ஒட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதே வயதொத்த
அதே ஊரைச் சேர்ந்த
திருநிறை செல்வனுடைய
இறுதி அஞ்சலி சுவரொட்டியும்
அதே நாளில் ஒட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது
இரண்டு சுவரொட்டியிலும்
கல்வித்தகுதி உட்பட
அனேக பொருத்தங்கள்
இருவருக்கும்
வேறு வேறாக இருந்தது
தெரு மட்டுமே.
கவிதைகள் வாசித்தவர் : தரன்
Listen on Spotify :
தரன் பேச்சில் திறமையை காட்டியதில்லை செயலில் மட்டுமே திறமையை காட்டுபவர்… இந்த முன்னேற்றத்தில் அவருடைய உழைப்பு சொல்ல முடியாதது.