- அண்மையும் தூரமும்
இரண்டு வீடுகளுக்கிடையேயான தூரம்
இரண்டு மனிதர்களுக்கிடையேயான தூரம்
இரண்டு நிழல்களுக்கிடையேயான தூரம்
இப்படியான உலகில்
நம் காதுகளை அணைத்துக்கொண்டு
நம்மை அருகருகே வைத்திருக்கிறது கைபேசி
- லயம்
என் தாகம் தீர வழியொன்றும் இல்லை
இப்போதைக்கு ஒரு சொட்டு போதும்
சின்னஞ்சிறு வயதில் நீரை அள்ளித் தெளித்து
விளையாண்ட நீர் நிலைகளில் என் இத்துனூண்டு முகத்தை
அள்ளிக் கொண்டு போக வேண்டும்
அது அங்கேதான் இருக்கிறது என்பதை எட்டி எட்டி பார்க்கிறேன்
அது அங்கேயும் இங்கேயும் வேகம் கூடி என்னை மீறி ஓடியது
குழந்தை போல் எழுந்து விழுந்து
தத்தளித்து மூழ்கி விட
யாரோ கைப்பிடித்து வெளியேற்ற
மீண்டும் நினைவென்ற நீருக்குள் புதைந்தேன்
பிரதிபலித்தது என்னைப் போல் இன்னொரு முகம்
இன்னொரு நினைவில்
இன்னொரு லயத்தில்