நேற்று எனக்கு ஒரு காகிதமும் பேனாவும் கிடைத்தது
அதில் சில சொற்களைக் கொட்டிவைத்து கவிதை என்று பெயர் வைத்தேன்
இன்று சில வண்ணப்பூச்சுகள் கிடைத்தன
சுவற்றில் கிறுக்கி வைத்து ஓவியம் என அடிக்கோடிட்டுக்கொண்டேன்
நாளை வெறும் மணல் கூடக் கிடைக்கலாம்
அதில் கோபுரம் கட்டி கோவில் எனக் கும்பிட்டுக்கொள்வேன்
எதுவும் கிடைக்காத போது
காற்றோடு கதை பேசிக்கொண்டிருப்பேன்
மழை பெய்தால்
துள்ளிக்குதித்து ரசித்துக்கொள்வேன்
எந்தக்கோடியில் பாடலொலித்தாலும்
கூடவே நானும் முணுமுணுத்துக்கொள்வேன்
நாய்க்குட்டிகளுடன் சேர்ந்து
ஊர் சுற்றிக்கொண்டிருப்பேன்
காக்கைகளைப் பார்த்து
முன்னோர்கள் முறை சொல்லியழைப்பேன்
பூக்கள் பூக்கும் வரை
பார்த்துக்கொண்டிருப்பேன்
எனக்காய் ஒரு வானம்
எனக்காய் ஒரு பூமி
மீதமிருக்கும் மனிதர்கள் மட்டும்
ஓரமாய் இருந்துவிட்டுப் போகட்டும்…..
கவிதையும் குரலும் : ப்ரியா ரஞ்சன்
Listen on Spotify :