- தனியன்
அபூர்வங்கள் நிகழ வேண்டுமாயின்
மாறுபட்ட கோணத்தில் நிற்கத்தான் வேண்டும்.
கூட்டத்திலிருக்கும் ஒருவனைவிட
தனித்து நிற்பவனுக்கே நெஞ்சில் பதியும்
கல்லடியின் வலியும்
சொல்லடியின் வலியும்.
அக்கம் பக்கக் கேளிக்கைகளை
அள்ளிப் பூசி அவதரித்து
அரங்கேறும் நாட்டியத்தில்
பார்வையாளர் பலராயினும்
ஒரேயொரு கதாநாயகன்
அதுவும் விரும்பியதை எட்டத்துடித்த
உன்னுள் மட்டுமே வாழ்ந்த கதாநாயகன்.
உண்மையிலேயே
அபூர்வங்கள் நிகழ வேண்டுமாயின்
திடமாக நீ மாறுபட்ட கோணத்தில்
நிற்கத்தான் வேண்டும்.
- பத்திரமாயிரு
இடைவேளையேதுமின்றி
உன் நெஞ்சில்
பூத்துக் கிடக்கும் என்னை
எங்ஙனம் மறைத்துக் கொள்வாய்? என்கிறேன் .
இலையும் கொடியும் வரைந்த சட்டையைத்தான்
ஒவ்வொரு நாளும்
உடுத்த வேண்டியதாய் இருக்கிறது என்கிறாய்.
பாம்பு பூச்சி வந்தடையாமல்
பத்திரமாயிருயென்று சொல்லி
சிரித்து உதிர்கிறேன்.
- அவள்
தேவதையும் அவளே
சாத்தானும் அவளே
நீங்கள் சுழற்றும்
சொற்களெனும் சோழியில்
அவள் அவளை
முடிவு செய்துகொள்வாள்.
அவ்வளவு அழகான தேவதையவள்
அவ்வளவு அவ்வளவு கொடூரமான சாத்தானுமவள்.
- அலுவல்கள் ஆயிரம்
ஒன்றுமே வேண்டாம்
மணிக்கொரு முறை
ஒரேயொரு எமோஜியைத் தட்டிவிடு
உன்னுடைய அவ்வளவு வேலைகளுக்கும் நடுவே
நானொரு சிறு எமோஜியாகப்
பறந்து பரவசமடைகிறேன்!
- நினைவின் தலைகள்
ஓர் எறும்பை நசுக்குவதைப்போல
கசப்பான நினைவுகளை
நசுக்கி விடலாமென்று நினைத்தால்
அவை என்னவோ
பத்துத் தலைப் பாம்பாய்
படமெடுத்து ஆடுகின்றன!
கவிதைகள் வாசித்த குரல் : தேன்மொழி அசோக்.
அருமை
நன்றிங்க.
குரலும் உச்சரிப்பும் கவிதையும் அழகு
மகிழ்நன்றிங்க..