1
பூ
பூக்களாக அழகாய் இருக்கிறது
பறித்து
ஒவ்வொரு இதழையும் இனுக்கி இனுக்கிப்போட்டேன்
தனி தனியாகியும் அழகாய் சிரிக்கிறது
அதிலும் ஓர் இதழை பிட்டு மேலும் சோதித்தேன்
ஒரு பட்டாம்பூச்சி மெல்ல மெல்ல அலைமமித்து
ஒன்றாக மேலேகிறது
ரெண்டு துண்டு இதழ்களில்.
2
பூதம் வெண்மையானது
பூதம் மெளனமானது
பூதமொரு வெட்டவெளிக்குழந்தை
இவ்வளவுதான் பூதமென
குழந்தையின் கையில்
ஏந்தக் கொடுத்தேன்
மென்மையாக அதை
“ஃப்…ஊ…” ஊதி விளையாடினாள்
மிதந்து மிதந்து மிதந்தது
இலவம் பஞ்சு.
3
நின்றுபோன கடிகார முள்
அந்த பல்லியையே
பார்த்துக்கொண்டிருக்கிறது
சில பல நாட்களுக்கு முன்
அதனிதே… நிலையில்
அதற்கு பேட்டரி வாங்கிப்போட்டவன்தான்
பதினாறு நாள்கள் முன்
படுத்த படுக்கையாய்
எல்லோர் ஓட்டங்களோடு ஓட்டமாய்
அக்கடிகார முட்களையே
வெறித்துக்கொண்டிருந்தான்
அந்நிச்சலனனை
ஆகநிச்சயமாக
அம்முள்ளுக்கு அப்பவும் தெரிந்திருந்தது
இப்பவும் தெரிந்திருக்கிறது
4
ஐந்து மணி நேர பயணத்தில்
பக்கத்து இருக்கைக்காரர்
எந்த பேச்சும் கொடுக்காமல்
ஏன் ? அறிமுகம் கூட செய்துகொள்ளாமல்
பக்கத்து இருக்கையைப் போலவே
இருந்தார்
அவருக்குப் பக்கத்து இருக்கையாக
நானுமிருந்தேன்.
5
தொடரும்…
மிகவும் பிடித்த ஒருத்திதான்
‘அ’ சீரியலின் நாயகி.
ஏதோ ஒரு காரணமுடுத்தி பிரிந்தவளின் பிறந்த மேனி சாயல்தான் இவளும்
அவள் பேசும் வசனங்களுக்கெல்லாம்
நாயகனின் எதிர் வசனங்களை
மனனம் செய்து மறுநாள் மறுஒளிபரப்பில்
மீயமைவாய் பேசுவேன்
அப்படிப் பேசிப்பேசியே ஒருநாள்
உடன் போகயிருந்தேன்
அன்று
காதலைச் சொல்லும் காட்சி .
எபிசோட் நெருங்க நெருங்க
TRP எகிற எகிற
முதல் ஒளிபரப்பிலேயே
மியூட்போட்டுவிட்டு
மூச்சை ஒருமுறை ஏற இறங்கவிட்டு
ரெடியாக இருந்தேன்
திடீரென
நாயகி வேடத்திற்கு மாற்றொருவளை விதித்திருந்தனர்
மூச்சையாகி சரிந்து விழுந்ததில்
காலத்தின் ரிமோட்
சேனல்களை மாற்றி மாற்றி போட
இப்படித்தானவளும்
கிழக்கொளி நிலவானாள்
இப்போதுவரை அப்பித்தின்
தொடர்பில்தானிருக்கிறேன்
இப்போதுகூட.
“ஒன் செகன்ட் ப்ளீ…ஸ். “.
“அங்கே
அவளைப் போலவே
தெரிகிறதே !”
” Excuse me. ,
பிறிதொரு நாள்
இதைப்பற்றிப் பேசுவோம்”.
ஹலோ…
ஹலோ “யோகா… ” ஏங்க…
ஏங்க,
எங்கங்க…போய்டீங்க? .
தொடரும்…
rt Courtesy : society6.com
அற்புதம்…பூதம், தொடரும்…பிறகு எல்லாமே…