மொழி மடங்கல்
1.
என்னைத் தவிர எல்லோருக்கும் வைத்தாயிற்று
அந்நன்னாள் எனதில்லாமல்
போகலாமென்பதால்
என்னை அழைத்துக் கொள்ளவில்லை
ஆனால் நீங்கள்
வந்துதான் ஆகவேண்டும்.
ஒருவேளை நான் பிரசன்னமாகிவிட்டால்
ஓலையெழுத ஆள் வேண்டுமல்லவா!
2.
முதிர்கன்னியின் முகச்சுருக்கம் போல்
உன் உள்ளங்கை ரேகைகள்
காமம் சான்றதும்
நெற்றி வியர்வையை
அது பாங்காய் வழிக்கும்போது
சீலைச் சுத்திய சிசுவாய் நெளிகிறேன்
மொழியால் என்ன சொல்லிவிட முடியும்
உன் கர்ப்பச்சூட்டில் இடங்கொடு என்று
யாசிப்பதை மீறி.
3.
அந்தக் கண்களுக்கு
என்ன மொழிதான் தெரியாது
பேசயிருந்த
அத்தனை வார்த்தைகளுக்கும்
உரையெழுதிவிட்டது.
மௌனத்தின் எழுத்துகளைக்கூட
அறிந்து தானுள்ளது
கிளர்ந்தெழும் அத்தனை சொற்களையும்
கொளுத்திவிட்டு
தீத்துளி உதறலில் விரதம் கலைக்கிறது.
அணங்கை விழுங்கும்
கருந்துளைகள் கண்டு
கூச்சம் பிறப்பதில்
பிழையில்லை தானே.