நிமிர்ந்து நிற்கும்
ஒரே
வானவில்
நீ!
வண்ண வண்ண
ஆடையில்
கருப்பு வெள்ளை
படமாகக்
கனவில் வந்து போகிறாய்.
இது என்ன
துவைக்காமலே
அலசுகிறாய்
மழையில் நீ.?
சாயம் போகாத
உன் ஆடையும்
எவ்வளவு துவைத்தாலும்
நிறம் மாறாத என் கனவுகளும்
விடியும் வரை
நனைந்து கொண்டே
இருக்கிறது
என் கவிதையில்…!
வானத்தை
வெட்டி
வானவில்லின்
வர்ணம் தொட்டு
நட்சத்திரத்தைக்
கோர்த்தெடுத்து
நிலவை
நீள்வட்டமாக்கித்
துணைக்குத்
துணைக் கோள்களைத்
துண்டு துண்டாக்கி
அங்கங்கே மேகத்தைப்
பிரித்து
அழகான
சேலையை
நூர்த்தெடுத்து
முடித்த கவிதையைச்
சொன்னாய்…
“என்னைத் தேவதையாக்கிய
அதிசயம் நீ
வாங்கி தந்த சேலைக்கு
மட்டுமே தெரியுமென்று”
நீ நதியாக இருக்கிறாய்
வறண்ட பூமியில்
புரண்டுகிடக்கிறேன்
தாகத்தோடு நான்.
எனக்குள்ளே தொலைந்த மேய்ப்பன் நீ
வழி தவறிய
ஆடு போல் இருக்கிறது வாழ்க்கை.
உனக்கும் எனக்கும்
பெரிய இடைவெளி ஏதுமில்லை
ஒரு கடல்தான் இருக்கிறது
வா
காதலிப்போம்.
உன்
உருவத்தை வரையும்
ஓவியத் தூரிகை
எனது இமைகள்…
நினைத்தவுடன்
ஓவியம் திட்டி
விடுகிறது
விழிகளுக்குள்.
நீ
ஊருக்குப் போகிறாய்
காற்றடைத்த தலையணையில்
உயிரடைத்து
அனுப்பி
வைக்கிறேன்!
வாசல் வரை
வந்து விட்டுப்
போகிறாய்…
சுவாசக் குழாயில்
புகுந்த காற்று
நுரையீரல்
தீண்டாமல்
வெளியேறுகிறதைப் போல!