cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 17 கவிதைகள்

ஆறுமுகவிக்னேஷின் மூன்று கவிதைகள்


1. ஓதம்

நீ அலைகளால்
கரைக்கு மடல் எழுதும் கடல்

அன்றொருநாள்
நதிகளைக் கூட்டி
கடலின் நீர்மையைப்
பெருக்கியவளும் நீதான்
ஓதமே என்னினிய போதமே
பௌவமே
மழலை மாறாத கெளவையே.

2. நறுவீ

அடம்பிடித்து அழுதாலும்
கட்டாயமாக ‘பாய் கட்’
வெட்டிவிடப்படும் சிறுமி
முதன் முதலாக
ஆசை ஆசையாய்
கூந்தல் வளர்த்த போது
கழுத்தைத் தொட்ட கூந்தலையே
கணுக்காலைத் தொட்டதென எண்ணி
அழகு பார்க்க வைத்துப் பார்த்த
முதல் ரோஜா
தளிர்க்கையை
வருத்துமே என்றெண்ணி
பறிக்க ஏதுவாக
முள்ளின்றிதான்
இதழ் விட்டுச் சிரித்தது

ஆசை ஆசையாய்
முதன் முதலில்
மீசை வளர்த்த
பாலகனுக்குத்தான்
வைத்து அழகு பார்க்க
ஒன்றுமில்லை.

3. தெலீலா

தெலீலாவின் மடியாக இருக்கும்
சலூன் நாற்காலியில்
இருமாதத்திற்கு ஒருமுறை
சிம்சோனைப் போல்
உட்கார்ந்து கொள்கிறேன்

கருப்பு அங்கி ஒன்றைக்
கழுத்தோடு போர்த்தி
வெள்ளை நிற குண்டு பல்பைத்
தலைகீழாக வைத்ததை போல் இருக்கும்
நீர் போத்தலைச் சன்னமாக அழுத்தி
தலையில் ராஜ் அண்ணா
நீர் தெளித்தவுடனேயே
உறக்கம் சொக்கிக் கொள்கிறது

அரசியல் அங்கதங்களை
வாடிக்கையாளர்களிடம்
கதைத்துக் கொண்டே
தலையில் கத்தரி போடுகிறார்
ராஜ் அண்ணா

உறங்கியும் உறங்காமலும்
நான் இருக்க
பின்னணியில் பாடும்
பாடல் ஒன்றை
முணுமுணுத்தபடியே
அவருக்கு பிடித்த ஸ்டைலில்
முடியை வெட்டி முடிக்கிறார்

சாய வைத்து
தாடியைச் சவரம் செய்து விட்டு
மீசையையும் குறைத்து விட்டு
சலூன் நாற்காலியோடு என்னையும்
இடமும் வலமுமாக
ஒரு உலகத்தைச்
சுழற்றுவது போல சுழற்றி
பஞ்சு பொதியால்
ஒட்டிய பிசுறுகளைத் தட்டி விட்டு
கழுத்தில் கிடந்த கருப்பு அங்கியை
கழற்றி விடுகிறார்

முடி வெட்டிய பின்
சிம்சோனுக்குப் போல் எனக்கு
பலம் எதுவும்
குறைந்து விடவில்லை என்றாலும்
அழகு கொஞ்சம் கூடி விட்டதாய்
நானே அபிப்பிராயப் பட்டு
மமதையோடு வெளியேறுகிறேன்
சலூனை விட்டு.


கவிதைகள் வாசித்த குரல் : நந்தினி துரைசாமி

Listen On Spotify : 

About the author

மு.ஆறுமுகவிக்னேஷ்

மு.ஆறுமுகவிக்னேஷ்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website