- புத்தம் புதிதாய் ஒரு பழையமுது
பழைய தோழி ஒருத்தியை
எதிர்பாராமல்
வழியில் பார்க்க நேர்ந்தது.
புதைத்த மயிலிறகு நினைவில்
பழுத்த பக்கங்களைப் புரட்டுவதாய்..
பதிந்திருந்த முகம் தேடி
மூத்திருந்த கோலத்திற்குள்
முன்னேறுகிறோம்.
அவள் நெற்றித் தழும்பு
அடையாளத்தைப்
பழக்க தோசத்தில்
தடவிக் கொடுக்கிறேன்.
அப்படியே இருக்கடி என்று
கட்டிக்கொள்கிறாள் அவள்.
கிள்ளித் தந்த இலந்தை வடையை
டூ விட்டுக் கொண்டதும்
திருப்பிக் கேட்டது முதல்…
பழம் விட்ட பின்பு
காக்காய்க்கடி கடித்து
எச்சில் மாற்றிக் கொண்ட
கல்கோனா வரைக்கும்..
பழையதைக் கிண்டி..
பழையதைக் கிளறி..
பழையதைப் பரிமாறி..
பழையதைப் பருகிச் சுவைத்து..
திரும்பியிருந்த போது…
புதிய மினுமினுத்த நரைத்த என் பொழுதுக்கு..
ரிப்பன் கட்டிய ரெட்டை ஜடை முகம் வாய்த்திருந்தது இப்போது.
உள்ளங்கையில் கூட
அதே கல்கோனா பிசுபிசுப்பு.
பேசித் தீர்த்ததன் வழியே
பேசித் தீர்க்க முடியாததன்
பின்னோடுகையில்..
நாள் கிழமை மறந்து
பால்யத்தின் பழையமுதில்
ஆகபோதையாகிறது
இரவு.
- திருடியதெல்லாமும் தித்திப்பு அல்ல
திரும்பிப் பார்க்க வைத்த முதல் பார்வையில்…
திருடிக்கொண்ட அத்தனையும்
அத்தனை தித்திப்பு.
ஒருவரி விடாமல் பேச்சும்
ஒரு கணமும் தவறவிடாத அசைவுகளுமாய்.
திரும்பிப் பார்க்க வேண்டாத
கடைசிப் பார்வையில்…
திருட்டுக் கொடுத்ததன்
அத்தனையும்
அத்தனை கசப்பு.
ஒரு வரி விடாத பேச்சும்
ஒரு கணமும் தவறவிடாத
அசைவுகளுமாய்.
- நினைவின் குறுக்குப்பாதை
நீ எங்கோ வடக்கே..
நான் இங்கே தெற்கே.
உனக்கும் எனக்கும் வெகு தூரம்
என்று ஆயாசப்படுகிறாய் நீ.
தூரம் இன்னும் இறுக்கும் என்று ஆசுவாசப்படுகிறேன் நான்.
உண்மையில்
நிஜம் போல அத்தனை தூரமில்லை
நினைவின் குறுக்குப் பாதை.
மழையும்
மழைக்கு விட்ட காகிதக் கப்பலும்..
வெயிலும்
வெய்யிலுக்கு உறிஞ்சிய நொங்கும்..
வறண்ட அந்திக்கு
கடுங்காப்பியும்..
உழண்ட பொழுதுக்கு
இளையராஜாவும் ..
எக்காலத்துக்கும் துணையாகப்
புத்தகங்களுமென
எப்போதோ பரிமாறிக்கொண்ட
நம் பிடித்தங்களின் நிழல்களுக்குள்
நின்று பார்..
தலை முட்டிக்கொள்ளும்
பக்கம் தான்
நமதிந்த தூரங்களுக்கு.
கவிதைகள் வாசித்த குரல் : அன்புமணிவேல்
Listen On Spotify :