1
மழைக்கால நீரில்
காகிதப்படகு செய்து குதூகலிக்கும்
இந்த குழந்தை மனதில் ஈரக்காலடி
பதிக்கும் உன் சாமர்த்தியங்களில்
ஏதோவொரு நட்சத்திரத்தின் ஒளிர்தல்
அசட்டுத்தனமாக நெக்குருகி
வியாபிக்க
பெருத்த சத்தத்துடன் கரையிலொரு
பேரலை
இரவின் சொட்டுக்களுக்குள் இறங்கி
கதகதப்பை பரவுகிறது
எது எப்படியாக இருந்தாலும்
பாதத்தை முத்தமிடும் மணல்
வீடுவரை வந்துவிடப்போவதில்லை
அறிவாயன்றோ..
இன்மைகளில் தான் இருப்புக்களின்
மிக மெல்லிய உயிர்த்தவிப்புக்
கணவலி கால் இடறும்
2
கிளையொன்றில் தாழப்படியும்
பறவையென
எண்ணப்பெருவெளி குவியும்
தனிமைப்படிமங்கள்
எனை நானே மெல்ல ருசித்து
உண்ணத் தொடங்கியிருக்கும் இருண்ட
கணங்களிவை.
இறப்பொன்றின் பேரின்பத்தை நுகரத்
துடிக்கிறேன்
செல்லரித்து சிதிலமாகும் உடலை பேராசையோடு
கவனித்துக் கொண்டிருக்கிறேன்
முடிவற்ற அலைகள் கரை தொட்டு மீள்வது போல காலக் கனவுகள் ஒவ்வொன்றும்
தும்பிகளின் சமனிப்பில் நிலையழியும்
மகரந்தங்களென பொருளற்றவை
உடல் தொடங்கி உள்ளம் தொட்டு ஆன்மம் சூழும் ஒவ்வொன்றாய்
அறுத்துப் போகிறேன்….
தவளைச் சத்தம் செவியுற்றவுடன்
நச்சுநீரூறும்
நாகமென மரணம்
எனை விழுங்கிக்கொண்டிருக்கிறது….
கவிதைகள் வாசித்த குரல் : அன்புமணிவேல்
Listen On Spotify :