- அதரம்
நிர்வாணமான அவை
எப்பொழுதும்
களிப்பூட்டுவன
செல்கள்
நெருக்கமாய் சூழ்ந்த
செவ்விதழ்களில்
வண்ணமேற்றும் சாயங்கள்
வெளிப்படையானவற்றை
மறைக்கும் துணியாகிட
பயனற்று போகும்
பூவிதழ்களோடு ஒப்பிட்டு
வேரெந்த பரிசுத்ததோடும்
ஈடாகாத நீராகாரம்
மூலிகை நறுமணம்
வெதுவெதுப்பான
ஈரம் உள்வாங்கிய
அந்தி மந்தாரை
அறிவியல் அளவீட்டில்
அடைபடாத வடிவம்
ரேகைகளின் தெறிப்புகள்
பேச்சிற்கிடையில்
ஓரம் கடிக்கும் நங்கைக்கு
காற்று கருவி
இசை அமைக்கலாம்
இணைந்தால் ஓசை
மொழி பிரயோகத்தில்
அசையும் காட்சிகள்
நீளட்டும்
வெப்பத்தால் வறண்டு
நிறம் இழந்தால்
வேறு பொருளாவதில்லை
சுயம்பான கட்டிகை
மாதுளை பரல்கள்
புன்முறுவல்
தோற்ற மயக்கம்
முகத்தில் ஈர்க்கும்
பாகம்
வெளிச்ச பற்களை
மறைக்கும்
தசை திரை
எச்சில் கோடுகளோடு
இதழ் குவித்து
வெப்பம் விலக
உள்ளிருந்த மாருதத்தை
வெளியாக்கலாம்
காதலோ
காமமோ
ஒரு முத்தத்தின்
தொடக்கம் தான்
சகலமும் .
- பிடித்த மீன்
அதன் விருப்பப்படி
நீந்தி ….
உணவு உண்டு….
மின்னும்
வெள்ளி நிறச்
செதில்களோடு ….
கவரும் கண்
தூரிகை வால்
விரல் பிடியில்
அடங்கும் வாய்
வனப்பு பிசகாத
வாழ்க்கை ….
சுவாசம்
நீரிலே நடந்தேறி
ஒளிப்புகா பேராழம்
செல்லும்….
பெருமிதமாய்
பறைசாற்றி
பிரகாசமாய்
உளம் கவரும்
அம்மீன்
ஆச்சி மீன் குழம்பு மசாலாவில்
வெந்து கொண்டிருப்பது
பரிதாபத்திற்குரியவொன்றாக
இருக்கின்றது .
- இருக்கை
பற்றி படராத
அதன் இடம்
மௌனித்திருப்பதே
தற்காப்பு
சூட்சமம்
விடாது நிலவும்
சச்சரவுகளை
கேளாதிருப்பதே
உத்தமம்
தேவையற்ற
கோட்பாட்டை விட்டு
நடைபெறுகின்றவற்றை
அறியாத அமைதியே
சரியானது
மாநாட்டின்
கைக்கலப்பு
அசூசை சொற்கள்
ஒன்று சேராத
இனத்தின்
காழ்ப்புணர்ச்சி
குரூரத்தை தூண்டி
நிம்மதியிழக்க
செய்வதெல்லாம்
இந்த இருக்கை தானே…
நிச்சயமற்ற
நிழல்
தொடர்வதை
மெய் பிம்பமாக்குவது
சாத்தியமில்லை
செல்வாக்கை
அதிகப்படுத்தும்
ஏழை முறை
மாற்றலாகிவிடும்
எதிர்வாதம்
உள்வாங்காது
உண்மையின்
உதிரத்தை
பறைசாற்றாது
வாய்மையை
தகவமைத்துக்கொள்ள
பெற்ற துளி அறிவின்
நீதி விளக்கம்
புரியாமல்
போனாலும்
கருத்தை முன்வைக்க
மறுப்பதில்லை
இருக்கையாளர்
கூட்டாளி
சகவாசம்
தேவை கருதியே
மனைவிமார்கள்
தேனீர் தருவார்கள்
பொருள்
பேராசை
பேரின்பம்
நிறைவடைய
செய்துவிடும்
நாடக பிரச்சாரத்தை
ஆதரிக்கும்
இந்த இருக்கையை விட
யாருக்கு தான்
மனசு வரும் .
- நம்மை போல தான் தேவதைகளும்…
அவளுக்கு காய்ச்சல்
வராதா …..
வயிறு வலிக்குமா …
படித்த படிப்புக்கு
வேலையின்றி
புலம்பியிருப்பாளா …
யாரிடமாவது
பணம் கொடுத்து
ஏமாற்றமடைந்திருப்பாளா ?
எதுவும் கிடைக்காத
விரக்தியில்
என்றைக்காவது
தற்கொலை
செய்துகொள்ள
துணிந்திருப்பாளா…?
மிகவும்
எதிர்பார்த்தவொன்று
கிடைக்காமல்
போயிருக்குமா …
முதல் விபத்தில்
வந்த
பதட்ட மயக்கம் போல்
அவளுக்கும்
வந்திருக்குமா…?
தீய பழக்கம்
ஏதேனுமொன்றிக்கு
அடிமையாகி இருப்பாளா ?
தேர்வில்
தோல்வி
அடைந்திருப்பாளா…?
அண்ணன்
அடித்திருப்பானா ?
அப்பாவை
முறைத்திருப்பாளா…?
அடகு கடைக்கு
சென்றிருப்பாளா ?
வீட்டுக்கு
மளிகை சாமான்கள்
வாங்கி கொடுப்பாளா….
அம்மாவை
மருத்துவமனைக்கு
அழைத்துச்
சென்றிருப்பாளா …
மீதி சில்லறை
வாங்க மறந்து
வந்திருப்பாளா …
தீபாவளிக்கு
சொந்த ஊர் போக
பேருந்து கிடைக்காமல்
அவதிப்பட்டிப்பாளா ….
பொய் என்று
தெரிந்த பின்பும்
பிறர் கூறும்
கதைக்கு
போலியாக
தலையாட்டிருப்பாளா….
பொது வாழ்வில்
சந்திக்கும்
சகலமும்
இந்த மாபெரும்
பேரழகிற்க்கும்
நடக்கும் என்பதை
ஆழ்மனம்
ஏற்கவே மறுக்கிறது .
கவிதைகள் வாசித்த குரல் : நலங்கிள்ளி
Listen On Spotify :