- போதும்
கனத்த நினைவுகள்
மேலெழும் நாட்களின் தனிமை
மெது விடம்
துணைசேரும்
காலத்தின் கொடுக்குகளுக்கு
சொட்டு சொட்டாய் கொட்டத்தெரிகிறது
உறைந்த உள்ளொடுக்கம் நீவி
சொட்டுகளுக்கிடைப்பட்ட இடைவெளியில் தப்பித்தல்
தண்டவாள இடுக்கில் யானைக்கால்
கடிகார முள் நுனி திரண்ட காலத்துளி
தயங்கிச் சொட்டும்
ஏதோவொரு நொடி
எதுவும் நிகழலாம்
ஒரு விடுபடலோ
ஒரு பேரதிர்ச்சியோ
இப்போதைக்கு
அது ஓர் உறக்கத் தொடக்கமாயிருத்தல் மதி
- மூடப்படும் கதவு
அன்பின் தானியங்கிக் கதவுகள்
அதிவேகமானவை.
உள் நுழைந்தவுடன்
அடுத்தவர் வருகைக்கான பேருதவியாக
இடையே கருணைக் கால்களை நீட்டி
மூடுவதற்கு இடையூறு செய்வது
தண்டனைக்குரிய குற்றமாகும்
அன்பு கூடவேண்டுமெனில்
கதவுகளை விட்டு விலகியிருங்கள்
நெருங்கினாலே
வெளியேற எத்தனிக்கிறோம் என
சட்டெனத் திறக்கும் அதே வேகத்தில்
நாமும் வெளியே விழுந்து விட வாய்ப்பதிகம்
வெளியிலிருந்து உட்புக
கால வரையறையற்ற காத்திருப்பு வேண்டும்
எப்போதேனும் உங்கள் நிறுத்தத்தில்
அது நிற்கலாம்
நிற்காமலேக் கூடப் போகலாம்
கவிதைகள் வாசித்த குரல் : அன்புமணிவேல்
Listen On Spotify :
உறைந்த உள்ளொடுக்கம் நீவி
சொட்டுகளுக்கிடைப்பட்ட இடைவெளியில் தப்பித்தல்
தண்டவாள இடுக்கில் யானைக்கால் // அருமை அருமை. மிக அருமையான இரண்டு கவிதைகளுக்கு வாழ்த்துகள். கவிதையின் உணர்வை புரிந்த வாசிப்பும் குரலும் அருமை. சுசித்ரா கவிதைகள் எப்போதும் ஸ்பெசல்.