- புறவாசல் கணக்கு
அனுமதிக்கப்பட்டதாய் காட்டிய
அந்த உள்வாசல் வளைவைத் தான்
தேடிக்கொண்டிருக்கிறேன்
இறக்கி வைத்திருக்கும் இந்த இரவுக்குத் துணையாக
மேலும் கீழுமாய் இழுத்துப்போகும்
இடம்
இதுவரை நானே அறியாததென்ற அபத்த குரலை
யாருக்கு எடுத்துரைக்க
எதிரொலிக்கும் சுவர்
தின்று செரிக்கிறது
எனதல்லாத குரலை
நாற் பக்கமும் இருந்து பெருகுகிற
அர்த்தப் பிடிமானம்
இறுதியாய் கொடுப்பது ஒரு பிடியற்ற சொல்லைத் தான்
எனும்போது
நிலமெனக் கிடக்கிறது காலம்
இரவோ
ரேகை விரித்துப் படித்துப்பார்க்கும் அர்த்தம்
அதரப் பழசு
அடைந்திடாத அந்த உள்வளைவோ
அடைத்துக் கொடுக்கும் மன்றாடலை
பிடித்துச் சேர்க்கிறேன்
என் தோள் சொல்லும் கதைக்குள்
ஏறிக்கொள்கிறது
எனதல்லாத இரவு
- மண்டைக் கணம்
எளிதில் தொடங்கிவிடாத எதோ ஒன்று
எப்படி எளிதாகிவிடுகிறது
என்ற கேள்வி மண்டைக்குள் உண்டு
உண்டு உண்டு கனக்கும்
பதில்
திருப்பித் தருவதெல்லாம்
தீர்மானம் போல இருக்கிற போலிப் புன்னகையைத் தான்
பின்ன
கடந்து வந்த வலிகளுக்கு
நெடுஞ்சாலைகளில் இடமுண்டா என்ன?
- நீலம் உண்ணும் மௌனம்
உன் இதயத்தின் ஓசையை கேட்டுக்கொண்டிருக்கிறேன்
அன்று கேட்ட
அதே அர்த்தம் மாறாத நிழலோடு
ஒரே உருவம்
எதிரெதிர் துருவங்களாகிற விந்தை
நிகழ்த்திக் காட்டும் மாயத்தில்
நான் களவாடப்படுகிறேன்
என் முன் நிற்கும் திரைக்கும்
என் உள் நிகழும் கொலைக்கும் இடையே
தீவென உருமாறிக் கொண்டிருக்கிறது
என் உள்ளங்கை
மௌனமாய் ஒரு கையை
என் இன்னொரு கையால்
அழுந்தப் பற்றுகிறேன்
துணைக்கு உடன் வருகிறது
நீலம்
-
பொருள் கொள்ளும் வட்டம்
சந்தர்ப்பம் தந்த சொல்லாகத்தான்
உன்னைப் பார்க்கிறேன்
ஒரு பேருண்மை கொடுத்துக்காட்டும்
காட்சியின் மீது சிறு நிழலென
தங்கிக்கொள்கிற தர்க்கம்
என் தார்மீகம்
சுய கழிவிரக்கம் ஒரு துண்டுச்சீட்டை
ஒட்டிப்பார்க்கும் புறமுதுகின் மேல்
எனக்குக் கவலைகள் இல்லை
நின்றாடும் கோலம்
நிம்மதி கொள்ளும் வாழ்வின் மேல்
வந்தால் வளரும் வனமும்
கொண்டால் நுழையும் வானமும்
எனக்கு வேறுவேறு இல்லை
என் முற்றத்து ரோஜா
யாருமற்று அசையும் போது
அதனிடம் சொல்லி வைக்கிறேன்
காற்றுண்டு
கண்டுணரக் காலம் கொள்ளும்
கோலத்தில்
நில்
மற்றதெல்லாம் சந்தர்ப்பம்
கவிதைகள் வாசித்த குரல் : ரேவா
Listen On Spotify :
Kavithai Arumai and voice romba superrrr 👌😍😍
Excellent